பாஜக அரசின் தவறான கொள்கைகளால் தொழில் துறை பாதிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், தொழில்துறையை சிதைத்து, நிறுவனங்களைத் திவாலாகும் நிலைக்குத் தள்ளிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,
பாஜக அரசின் தவறான கொள்கைகளால் தொழில் துறை பாதிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், தொழில்துறையை சிதைத்து, நிறுவனங்களைத் திவாலாகும் நிலைக்குத் தள்ளிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
வாராக்கடனை வசூலிப்பது தொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், 2018- மார்ச் 1-இல் இருந்து 180 நாள்களுக்குள் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால், எஃகு, மின்சாரம், நிலக்கரி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாராக்கடனை வசூலிப்பதில் ஒரே விதமான அணுகுமுறையை பாஜக அரசு மேற்கொள்கிறது. மத்திய அரசின் தவறான அணுகுமுறை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்சிடிசி அமைப்பை செயல்படுத்தாதது ஏன்?: பயங்கரவாதத்துக்கு எதிரான என்சிடிசி அமைப்பை மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்று ப.சிதம்பரம் மற்றொரு பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை (என்சிடிசி) அமைப்பதற்கான பணிகளை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கியது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட சில மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய அளவிலான பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது, மாநிலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக இருக்கும் என்று அவர்கள் காரணம் கூறினர். மேலும், இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அதன் பிறகு, மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து, தேசிய உளவு அமைப்பும் (என்ஏடி-கிரிட்) அமைப்பும் நிறுவப்பட்டது.
எனினும், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த மத்திய பாஜக அரசு, அந்த அமைப்புகளை செயல்படுத்தாமல் பயங்கரவாதிகள் எளிதில் தாக்குதல் நடத்தும் வகையில் நாட்டை பலவீனமாக வைத்திருப்பதாக, ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com