மத்திய அரசின் ஆட்சேபங்கள் தள்ளுபடி: ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை
மத்திய அரசின் ஆட்சேபங்கள் தள்ளுபடி: ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள ஆங்கில நாளிதழின் செய்திகள் உள்பட அனைத்து விதமான ஆவணங்கள் அடிப்படையிலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 11) தொடங்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
மறுஆய்வு மனுக்கள்: இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, அந்த ரகசிய ஆவணங்கள் தொடர்பான ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகக் கசிந்த ஆவணங்களையும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் எவரும் தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, முதலில் மத்திய அரசின் ஆட்சேபங்கள் மீது முடிவு செய்தபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பைக் கடந்த மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அடிப்படை உரிமை: இந்நிலையில், மத்திய அரசின் ஆட்சேபங்கள் தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் புதன்கிழமை வழங்கினர். அதில் அவர்கள் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய முதல்கட்ட ஆட்சேபங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதுபோன்ற ஆவணங்களைப் பொதுவெளியில் பத்திரிகைகள் வெளியிடுவதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் கருத்துகள் வெளியிடுவதைத் தடை செய்யும் நோக்கில், நாடாளுமன்றமும் எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை. 
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறும். மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தனது தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் சார்பாகவும் தீர்ப்பை வாசித்தார். நீதிபதி கே.எம்.ஜோசஃப் தனது தீர்ப்பை தனியே வாசித்தார்.   
நாட்டின் பாதுகாப்பே முக்கியம்: முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் தனித்தன்மை கொண்டது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படி, அதனைத் தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இதனை உறுதிசெய்கிறது. நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆவணங்களை ஆதாரங்களாக யாரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று வாதாடியிருந்தார். 
மேலும், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்ட ஆவணங்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தை அந்த நாளிதழ் மீறியுள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருந்தார்.


ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய முதல்கட்ட ஆட்சேபங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதுபோன்ற ஆவணங்களை பொதுவெளியில் பத்திரிகைகள் வெளியிடுவதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில், தவறே நடக்காது என்பது போன்று மத்திய அரசு வாதிட்டது. ஆனால், மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்த மத்திய அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது
- அருண் செளரி, முன்னாள் அமைச்சர்

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டின் காவலாளி தவறிழைத்து விட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்டது. ரஃபேல் விவகாரம் குறித்து நேரடியாக விவாதம் நடத்தத் தயாரா என்று மோடிக்கு சவால் விடுக்கிறேன். எனது கண்களைப் பார்த்து பதிலளிக்க மோடிக்கு தைரியம் கிடையாது
- ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதில் பாதியைக் கூட காங்கிரஸ் தலைவர் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இங்கு வந்து காவலர் ஒரு திருடர் என்று கூறுவதன் மூலமாக நீதிமன்றத்தை அவர் அவமதிக்கிறார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதையே அவர் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்
- நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com