ஹிந்து-முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு

ஹிந்து-முஸ்லிம் இடையே பிரிவினையைத் தூண்ட சிலர் முயற்சித்து வருவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிந்து-முஸ்லிம்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சி: பாஜக மீது மாயாவதி குற்றச்சாட்டு

ஹிந்து-முஸ்லிம் இடையே பிரிவினையைத் தூண்ட சிலர் முயற்சித்து வருவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
 ராம நவமியையொட்டி, மாயாவதி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "மக்கள் அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துகள். ராமரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் நிலையில், ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையைத் தூண்ட சிலர் முயற்சித்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் நோக்கத்தைக் கொண்டே அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், "மக்களவைத் தேர்தல் என்பது, ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெறும் போட்டியாகும்' என்று சூசகமாகக் கூறியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி, மாயாவதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் மாவட்டத்தில், பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மாயாவதி பேசியதாவது:
 பஜ்ரங்பலியோ அல்லது அலியோ பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. அனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யோகி ஆதித்யநாத் கூறினார். எங்களுடைய முன்னோர்கள் குறித்த தகவலை அளித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அலியும், அனுமனும் எங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களை வழிபடுபவர்களும் எங்கள் கூட்டணிக்கே வாக்களிப்பர். மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும். எங்கள் கூட்டணியே வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
 உத்தரப் பிரதேசத்தில், ஹிந்து கடவுளை வழிபடுபவரை "பஜ்ரங்பலி' என்றும், முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுபவரை "அலி' என்றும் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.
 இதனிடையே, ஜாலியன்வாலா பாக் படுகொலை தொடர்பாக மாயாவதி வெளியிட்ட பதிவில், "ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தையொட்டி, அதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 இந்தப் படுகொலைச் சம்பவத்துக்காக பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்கும்படி, இந்திய அரசு கோரியிருந்தால், இன்னும் மனநிறைவுடன் இருந்திருக்கும்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com