பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: அகாலிதளம் வலியுறுத்தல்

1984-ஆம் ஆண்டு, பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிரோமணி அகாலிதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1984-ஆம் ஆண்டு, பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிரோமணி அகாலிதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் வெள்ளிக்கிழமை இரவு, சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பாக, சிரோமணி அகாலி தளம் எம்.பி. ஹர்சிம்ரத் கெüர் பாதல் கூறுகையில், "அரசியல் ஆதாயம் தேடியே பொற்கோயிலுக்கு ராகுல் வருகை தந்துள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட "ஆபரேஷன் புளூ ஸ்டார்' சம்பவத்துக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும். இது தொடர்பாக, முதல்வர் அமரீந்தர் சிங் ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும்'' என்றார்.
 பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தும்பொருட்டு, கடந்த 1984-ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் அரசு, அதற்குள் ராணுவத்தை அனுப்பியது. இதற்கு "ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்று அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு பெயரிட்டது.
 முன்னதாக, ஹர்சிம்ரத் கெüர் பாதல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "முதல்வர் அமரீந்தர் சிங், ராகுல் காந்தியைப் பொற்கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், சீக்கியர்களின் புனிதத் தலத்துக்குள் ராணுவத்தை ஏவி, அந்த இடத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளது. அப்படியிருக்கையில், ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு மட்டும் பிரிட்டனிடம் மன்னிப்பு கோருவது எந்தவிதத்தில் நியாயம்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 இதற்குப் பதிலளித்து முதல்வர் அமரீந்தர் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெனரல் டயருக்கு உங்கள் (ஹர்சிம்ரத் கெüர் பாதல்) குடும்பத்தினர் விருந்தளித்தனர். அதற்காக நீங்கள் மன்னிப்பு கோரினீர்களா?' என்று கேள்வி எழுப்பினார். அகாலிதளம் முறையற்ற அரசியலில் ஈடுபட்டு வருகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com