10 % இடஒதுக்கீடு: மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்கள்; அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
 இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
 மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு, பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
 மக்களவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த முன்மொழிவை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், தேர்தல் ஆணையத்திடம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி பெற்றது.
 தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2,14,766 இடங்கள் உருவாக்கப்படும். இதில், 2019-20 கல்வியாண்டில் 1,19,983 இடங்களும், 2020-21 கல்வியாண்டில் 95,783 இடங்களும் உருவாக்கப்படும்.
 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ரூ.4,315.5 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 முன்னதாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஏற்கெனவே அளிக்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
 ஜிஎஸ்எல்வி 4-ஆவது கட்ட திட்டம்: ஜிஎஸ்எல்வி 4-ஆவது கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
 அதன்படி, 2021-24 காலகட்டத்தில் 5 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.2,729.13 கோடியாகும். இதன் மூலம் தகவல் தொடர்பு, விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றுக்கான முக்கிய செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளன.
 இந்தியா-பொலிவியா ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்: புவியியல், தாது வளங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியா, பொலிவியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com