நிதி ஒதுக்கீடுகளை ஏழைகளுக்கு சென்றடைய வைத்தது பாஜக அரசு: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி வளர்த்தெடுத்த இடைத்தரகர் முறையை மாற்றி, ஏழைகளுக்கான நிதி ஒதுக்கீடு முழுமையாக பயனாளர்களை சென்றடைய
நிதி ஒதுக்கீடுகளை ஏழைகளுக்கு சென்றடைய வைத்தது பாஜக அரசு: பிரதமர் மோடி


காங்கிரஸ் கட்சி வளர்த்தெடுத்த இடைத்தரகர் முறையை மாற்றி, ஏழைகளுக்கான நிதி ஒதுக்கீடு முழுமையாக பயனாளர்களை சென்றடைய நடவடிக்கை எடுத்தது பாஜக அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒருசேர நடைபெறும் ஒடிஸா மாநிலத்தின், சம்பல்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது ஏழைகளுக்காக ஒதுக்கப்படும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே சென்று சேர்ந்தது. மீதியுள்ள காசெல்லாம் ஊழல்வாதிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை யாரும் தடுக்க நினைக்கவில்லை. ஆனால், நிதி ஒதுக்கீடு ஏழைகளை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
கடந்த காலங்களில் உதவாத நிலையில் உள்ள அரசையும், ஊழல் அரசையுமே மக்கள் பார்த்து வந்தனர். கரும்பு ஊழல், ரேசன் ஊழல், யூரியா உர ஊழல் என்று கட்டுப்பாடற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிக் கொண்டே வந்தன. ஆனால், ஊழலை பாஜக ஒழித்துக்கட்டுவதால், இந்தக் காவலனைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸஸும், அதன் தோழமைக் கட்சிகளும் விரும்புகின்றன.
ஒடிஸா அரசு மீது விமர்சனம்: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ஒன்றரை மடங்கு உயர்த்தியது. ஆனால், மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் அரசு, அந்த விலைப்படி கொள்முதல் செய்யத்தவறிவிட்டது.
இதனால், ஒட்டுமொத்த கொள்முதல் நடவடிக்கையும் இடைத்தரகர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இறுதியாக, விவசாயிகளுக்கு அவர்களது விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
மத்திய அரசு அறிவித்த பிரதமரின் வேளாண் உறுதித் திட்டத்தை செயல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு அளிக்காமல் விவசாயிகளை மாநில அரசு வஞ்சித்துவிட்டது. 
மத்தியில் பாஜக அரசு மீண்டும் அமைந்தவுடன், தகுதியுடைய பயனாளிகள் உடனடியாக பயனடைவர். மீனவர் நலனுக்காக பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்படும். மேலும், நாடெங்கிலும் உள்ள மீனவர்களுக்காக ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com