பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
 பிகாரின் கடிஹார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
 நீங்கள் (முஸ்லிம் மக்கள்) உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம். இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். நீங்கள் சுமார் 64 சதவீதம் உள்ளீர்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, நரேந்திர மோடியைத் தோற்கடியுங்கள். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போன்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்களை பாஜக மறைமுகமாக ஆதரித்து வருகிறது என்றார் அவர்.
 சித்துவின் இந்த சர்ச்சைக்குரிய பிரசாரக் காணொலி, ஊடகங்களில் விரைவாகப் பரவி வருகிறது. சித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிகார் மாநில பாஜக துணைத் தலைவர் தாவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர். "அனைத்து பிரிவினருக்குமான வளர்ச்சி'யை ஏற்படுத்த பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பிரிவினையைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் நடந்துகொள்கிறது. இதன் மூலம், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் காங்கிரஸின் கொள்கை தெளிவாகத் தெரியவந்துள்ளது. இதனை பாஜக கண்டிக்கிறது.
 இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி சித்துவுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். தேர்தல் பிரசாரத்தின்போது, மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்குப் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
 மோடி ஒரு பொய்யர்: இதனிடையே, குஜராத்தின் டாங் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் மோடியை "பொய்யர்' எனக் குறிப்பிட்டார்.
 அவர் மேலும் கூறுகையில், "மகாத்மா காந்தியை நாட்டுக்குத் தந்த குஜராத், நாட்டின் பெரும் "பொய்யரை' பிரதமராகத் தந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. செல்வந்தர்களின் பிரதமராகவே மோடி விளங்கி வருகிறார். நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட சீனாவின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், நம்மை விட அதிக வேலைவாய்ப்புகளை அந்நாடு உருவாக்கி வருகிறது. அரசுப் பணிகளில் மட்டும் 25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். குஜராத் விவசாயிகளின் விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com