முதல்வர் அதிகாரத்தை சந்திரபாபு நாயுடு தவறாக பயன்படுத்துகிறார்: ஆளுநரிடம் ஜெகன்மோகன் ரெட்டி புகார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று ஆளுநரிடம் அந்த மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று ஆளுநரிடம் அந்த மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி புகார் அளித்துள்ளார்.
 சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம்சாட்டி, அந்த மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:
 தேர்தலின்போது, தெலுங்கு தேசம் கட்சிக்கு சாதகமாக செயல்படும் வகையில், தனக்கு நெருங்கியவர்களுக்கு முக்கியப் பதவிகளையும், பொறுப்புகளையும் சந்திரபாபு நாயுடு வழங்கினார். தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைகளில் எங்கள் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் தாக்கப்பட்டனர். இது குறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும்.
 மசூலிப்பட்டினத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்குள் அத்து மீறி நுழைந்து, இயந்திரங்களை சேதப்படுத்த சிலர் முயற்சி செய்துள்ளனர். அதனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான, உறுதியான அறையில் வைக்க வேண்டும். இயந்திரங்கள் இருக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
 தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சந்திரபாபு நாயுடு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மக்களின் வரிப் பணத்தை அவர் தவறான வழியில் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
 ஆந்திரத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com