மோடி எனப் பெயர் கொண்டோரெல்லாம் திருடரா? ராகுலுக்கு பிரதமர் கேள்வி

மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரையும் திருடர் என்று சொல்வதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி எனப் பெயர் கொண்டோரெல்லாம் திருடரா? ராகுலுக்கு பிரதமர் கேள்வி

மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரையும் திருடர் என்று சொல்வதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
 சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ பீமா மந்தாவி உள்ளிட்ட ஐவர், நக்ஸல் தீவரவாதிகளின் தாக்குதலில் பலியான விவகாரத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்த பிரதமர், காங்கிரஸ் கட்சியும், நக்ஸல்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகுவதாகவும் குற்றம்சாட்டினார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் ராகுல் காந்தி அண்மையில் பிரசாரம் செய்தபோது, ""நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப்பெயர் இருப்பது எப்படி? மோடி என்ற பெயர் உடையோரெல்லாம் திருடர்கள் ஆனது எப்படி?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்னும் இடத்தில், பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ராகுலுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:
 வாரிசு அரசியலில் வந்தவருக்கு (ராகுல்) தரக்குறைவான கருத்துகளை தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. குஜராத்தில் வாழும் "சாஹு' இன மக்கள்தான் மோடி என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களெல்லாம் திருடர்களா? இதுதான் நீங்கள் பேசும் மொழியா? இதுபோன்றவர்களை நாம் தூக்கியெறிய வேண்டும்.
 சத்தீஸ்கர் அரசு மீது விமர்சனம்: இந்தப் பகுதியில் நக்ஸல்களின் ஆதிக்கம் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தச் சம்பவம் நடந்தது எப்படி? நக்ஸல்களுடன் ஒன்றுக்குள் ஒன்றாக காங்கிரஸார் பழகி வருகின்றனர்.
 காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து வன்முறைக்கான சதியாளர்களும், பயங்கரவாதிகளும் மகிழ்ச்சியில் நடனமாடுகின்றனர். காங்கிரஸ் கட்சி தேசப் பாதுகாப்பை சமரசப்படுத்திக் கொள்வதை நீங்கள் (மக்கள்) அனுமதிப்பீர்களா?
 சத்தீஸ்கரில் நக்ஸல்களை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது. தேச விரோதச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.
 சத்தீஸ்கர் மக்களுக்கு கண்ணிவெடிகள் வேண்டுமா? அல்லது மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவை வேண்டுமா?
 ஏழை மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் "ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தில் பயனடைய வேண்டிய பயனாளர்கள் பட்டியலையும் சத்தீஸ்கர் அரசு நிறுத்தி வைத்துவிட்டது.
 மே 23-ஆம் தேதி "மோடி சர்க்கார்' மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், வேளாண் நிதியுதவி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்படும் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com