
திருடர்களின் பெயர்கள் மோடி என்று முடிவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை எதிர்த்து அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று பிகார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி தெரிவித்தார்.
பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
திருடர்களின் பெயர்கள் மோடி என்று முடிவதாக ராகுல் கூறியதால் மிகவும் வேதனை அடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததுடன், என்னையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்திவிட்டார். எனவே, ராகுலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார் சுஷீல் குமார் மோடி.
வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியையும் அண்மையில் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
இதனிடையே, காங்கிரஸுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நான் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். சுஷீல் குமார் மோடி திருடர் தான். வேண்டுமானால், எனக்கு எதிராக அவர் அவதூறு வழக்கு தொடுக்கட்டும்' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...