குறுகிய கால பிரதமர் குஜ்ரால்

ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்றதும்  நமக்கு நினைவுக்கு வருபவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்தான். யாரும் 
குறுகிய கால பிரதமர் குஜ்ரால்


ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்றதும்  நமக்கு நினைவுக்கு வருபவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்தான். யாரும் எதிர்பாராத வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவால் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார் மன்மோகன். அதனால் ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என அறியப்பட்டார். ஆனால் இந்த வார்த்தைக்கு முதல் சொந்தக்காரர் நாட்டின் 13-ஆவது பிரதமராக பதவி வகித்த ஜனதா தளம் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் 
இந்தர் குமார் (ஐ.கே.) குஜ்ரால்தான். கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக அடையாளம் கொண்ட குஜ்ரால், நாட்டின் பிரதமராக பதவியேற்றது ஒரு விபத்து என்றே சொல்லலாம். 

பிரதமர் பதவியில் வெறும் 11 மாதங்கள் மட்டுமே இருந்த குஜ்ரால், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கைக்கு அடித்தளமிட்டு சென்றார். குஜ்ரால் டாக்டிரின் எனப்படும் அந்தக் கொள்கை, இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையேயான நட்புறவுக்கு புதிய அடித்தளத்தை ஏற்படுத்தியது.

11 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு: நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஜீலத்தில் கடந்த 1919ஆம் ஆண்டு குஜ்ரால் பிறந்தார். அவரது குடும்பத்தினர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதால், அந்த ஈடுபாடு குஜ்ராலையும் தொற்றிக் கொண்டது. இதனால் இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறு வயது முதலே அவரும் தீவிரம் காட்டினார்.

இதற்காக 1931இல் தனது 11 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதால், 1942இல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் லாகூரிலுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இக்காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.

இந்திராவுடன் மோதல்: இதையடுத்து 1964ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஜ்ரால், அதே ஆண்டில் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்தபோது, நாடு முழுவதும் 1975இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த குஜ்ராலிடம், செய்திகள் மற்றும் பத்திரிகை தலையங்கங்களை தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. இதை குஜ்ரால் ஏற்காததால், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து குஜ்ரால் உடனடியாக விடுவிக்கப்பட்டார். பின்னர் ரஷியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.

ஜனதா தளத்தில் இணைந்தார்: 1980ம் ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜ்ரால் விலகி, ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு தேர்தலில் ஜனதா தளம் சார்பில் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான அரசின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக குஜ்ரால் பதவியேற்றார். இதேபோல், தேவெ கௌடா தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சரவையிலும் வெளியுறவுத் துறை அமைச்சராக குஜ்ரால் பதவி வகித்தார்.

இந்த காலக்கட்டத்தில், அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய வெளியுறவுக் கொள்கையை குஜ்ரால் உருவாக்கினார். இதுவே பிற்காலத்தில், குஜ்ரால் டாக்டிரின் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தேவெ கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்தது ஆதரவு அளித்தது. இந்நிலையில், அந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால் அரசுக்கு ஆபத்து நேரிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு கவிழாமல் இருக்க புதிய தலைமையின்கீழ் அரசு அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த மூத்த தலைவரான குஜ்ரால், புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் 13ஆவது பிரதமராக 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அவர் பதவியேற்றார்.

லாலுவால் புதிய பிரச்னை: பிரதமராக பதவியேற்ற சில வாரங்களிலேயே தனது சொந்த கட்சியான ஜனதா தளத்தில் இருந்தே அவருக்கு பிரச்னை உருவானது. பிகார் முதல்வராக இருந்த ஜனதா தளம் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் வழக்குத் தொடுக்க ரிசர்வ் வங்கி, ஆளுநர் ஏ.ஆர். கித்வாயிடம் அனுமதி கோரியது. இதற்கு ஆளுநர் ஏ.ஆர். கித்வாயும் தனது அனுமதியை அளித்தார். இதனால் லாலு பிரசாத் யாதவ் பிகார் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஜனதா தளத்திலேயே கோரிக்கை எழுந்தது.

இதை லாலு பிரசாத் நிராகரித்து விட்டார். அவருக்கு சாதகமாக கால்நடை தீவன ஊழல் வழக்கை  விசாரித்த சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை குஜ்ரால் இடமாற்றம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஜனதா தளத்தில் இருந்து விலகி லாலு பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எனும் பெயரில் புதிய கட்சியை 1997இல் ஆரம்பித்தார்.  அவரது கட்சியில் இணைந்த ஜனதா தளம் எம்பிக்கள் 17 பேரும், குஜ்ரால் அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் குஜ்ரால் அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து விலகியது.

குஜ்ரால் அரசு கவிழ காரணமான ஜெயின் ஆணைய அறிக்கை: குஜ்ரால் அரசு எடுத்த முடிவுகளில், உத்தரப் பிரதேசத்தை ஆண்ட கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசை கலைக்கும்படி குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணணுக்கு பரிந்துரை செய்தது, அதை அவர் நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுக்கும், குஜ்ரால் அரசுக்கும் மோதல் போக்கு உருவானது.

இதுமட்டுமல்லாமல், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையால், மத்திய ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியுடனும் குஜ்ராலுக்கு மோதல் ஏற்பட்டது. அந்த அறிக்கையில், ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமான விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு திமுக ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததுடன், அக்கட்சித் தலைவர்கள் சிலரும் அமைச்சர்களாக இருந்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று, ஜெயின் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கலானது. அதன்மூலம், திமுக மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது உறுதியானது.
இதனால், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது. இதை குஜ்ரால் ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் 1997 நவம்பர் 28இல் திரும்பப் பெற்றது. இதையடுத்து பிரதமர் பதவியை குஜ்ரால் ராஜிநாமா செய்தார். அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட்டது.


வாஜ்பாய் அரசை ஆதரித்த குஜ்ரால்: 1998 பிப்ரவரி - மார்ச் மத்தியில் மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஜலந்தர் தொகுதியில் அகாலிதளம் ஆதரவுடன் சுயேச்சையாக குஜ்ரால் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸின் உம்ராவ் சிங்கை 1,31,000  வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 12ஆவது மக்களவையில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை குஜ்ரால் ஆதரித்தார். இருப்பினும் 1998 மே மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொக்ரான் அணுகுண்டு சோதனை தொடர்பான விவாதத்தில் வாஜ்பாய் அரசின் முடிவுகளை விமர்சித்து பேசினார். பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவையும் சாடினார். இருந்தபோதிலும் வாஜ்பாயின் லாகூர் பயணத்தையும், லாகூர் பிரகடனத்தையும் அவர் ஆதரித்தார். அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றதும், மக்களவையில் பாஜக கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அதை குஜ்ரால் எதிர்த்தார்.

இறுதிக்காலம்: 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குஜ்ரால் போட்டியிடவில்லை. தீவிர அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 2004ஆம் ஆண்டில் அவரது மகன் நரேஷ் குஜ்ரால், ஷிரோமணி அகாலி தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2012ஆம் ஆண்டில் பல்வேறு உடல் உறுப்புகளும் செயலிழந்ததால், குஜ்ரால் காலமானார். அப்போது அவருக்கு வயது 92.

மாநிலங்களவையில் இருந்து பிரதமரான 3-ஆவது நபர் குஜ்ரால். அவருக்கு முன்பு இந்திரா காந்தியும், தேவெ கௌடாவும் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து பிரதமராகி உள்ளனர். குஜ்ராலுக்குப் பிறகு மன்மோகன் சிங், மாநிலங்களவை எம்.பியாக இருந்து பிரதமரானார்.

குஜ்ராலின் மனைவி பெயர் ஷீலா குஜ்ரால் ஆகும். அத்தம்பதியினருக்கு நரேஷ், விஷால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்களில், நரேஷ், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். குஜ்ராலின் இளைய சகோதரர் சதீஷ் குஜ்ரால், பிரபல ஓவியர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com