2 கட்டத் தேர்தல்களில் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது: பிரதமர் மோடி

மக்களவைக்கு இதுவரை நடைபெற்றுள்ள 2 கட்ட தேர்தல்களில், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் தூக்கம் பறிபோய் விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி
மேற்கு வங்க மாநிலம், புனியாத்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்த பாஜக நிர்வாகிகள்.
மேற்கு வங்க மாநிலம், புனியாத்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்த பாஜக நிர்வாகிகள்.

மக்களவைக்கு இதுவரை நடைபெற்றுள்ள 2 கட்ட தேர்தல்களில், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் தூக்கம் பறிபோய் விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள புனியாத்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு மோடி தெரிவித்தார். அவர் மேலும் அக்கூட்டத்தில் பேசியதாவது:
தாய், நிலம், மக்கள் என்ற கோஷத்தை முன்வைத்து, மேற்குவங்க மக்களை மம்தா பானர்ஜி முட்டாளாக்கி வருகிறார்.  மேற்குவங்கத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பான அறிக்கை வந்ததிலிருந்து, வேகத் தடையாக விளங்கும் மம்தா பானர்ஜியின் தூக்கம் பறிபோய்  விட்டது. தொலைக்காட்சியில் பார்க்கையிலும், நேரில் பல முறை சந்தித்தபோதும், மம்தா பானர்ஜி மிகவும் எளிமையானவர், கடின உழைப்பாளி, மேற்குவங்க வளர்ச்சி மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்று தவறாக கணித்து விட்டேன். 
நாட்டின் பிரதமரானதும் அவரது செயல்பாடுகளை பார்த்தேன். அதன்பிறகு எனது கண்கள் திறந்து கொண்டன. மம்தாவின் உண்மையான குணத்தை தெரிந்து கொண்டேன். மேற்குவங்கத்திலுள்ள குழந்தைகளும் அவரை புரிந்து கொண்டுள்ளன.
மே 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகையில், மக்களின் பணத்தை திருடியது, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது, வன்முறையில் ஈடுபட்டது ஆகியவற்றுக்கான விளைவுகளை மம்தா தெரிந்துகொள்வார்.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸூக்காக அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களை பிரசாரம் செய்ய மம்தா அனுமதியளித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸூக்காக அண்டை நாட்டினர் பிரசாரம் செய்வது வெட்கக்கேடான விஷயமாகும். இந்தியாவில் இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை. சிறுபான்மையினரை திருப்திப்படுத்த திரிணமூல்  காங்கிரஸ் இதை செய்துள்ளது. பாலாகோட் தாக்குதலுக்கு ஆதாரத்தை மம்தா கோருவது கண்டிக்கத்தக்க விஷயமாகும். பாலாகோட் தாக்குதலுக்கு ஆதாரத்தை கேட்பதற்குப் பதிலாக, நிதிநிறுவன மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோர் குறித்த தகவல்களை திரட்டியிருக்கலாம்.
நாடு முழுவதும் தமது டோலாபாஜி வரி (மிரட்டல் வரி) விதிப்பை அமல்படுத்த மம்தா பானர்ஜி விரும்புகிறார். இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், எல்லைத் தாண்டிய ஊடுருவல்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எல்லையில் வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த முயற்சிப்போர், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள். 
நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிற நாடுகளில் சிலர் தங்கிவிட்டனர். அவர்கள் தங்களது மதம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அந்நாடுகளில் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு, இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் உள்ளது. அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆனாலும் சரி, காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகள் ஆனாலும் சரி, மக்களை பிளவுப்படுத்தும் அரசியலையே செய்கின்றன. ஆனால் பாஜகவோ, அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com