ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு

ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "இம்பால்' போர்க் கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 'இம்பால்' போர்க்கப்பல்.
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 'இம்பால்' போர்க்கப்பல்.

ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "இம்பால்' போர்க் கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
"புராஜெக்ட் 15 பிராவோ' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 3-ஆவது போர்க் கப்பலான "இம்பால்', மும்பை கப்பல்கட்டும் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகளும், பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தியக் கடற்படையில் கப்பல் இணைக்கப்பட்டு, முதல் பயணத்தை மேற்கொண்டபோது, அங்குக் கூடியிருந்தவர்கள் "பாரத் மாதா கி ஜே' என்றும், "வந்தே மாதரம்' என்றும் முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக, இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா கூறியதாவது:
மஸகான் கப்பல்கட்டும் நிறுவனம் (எம்டிஎல்), இந்தியக் கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஆயுத நிர்மாண வாரியம் (ஓடிஎஃப்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தப் போர்க் கப்பல் கட்டப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், இந்தக் கப்பல் கட்டப்பட்டது.
முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தக் கப்பல் கட்டப்பட்டுள்ளது, மேலும் சிறப்பானதாகும். இது, "கப்பல் வாங்கும் நாடு' என்ற அடையாளத்தை அழித்து, "கப்பல் கட்டும் நாடு' என்ற கனவை இந்தியா அடைய உதவியாக இருக்கும். போர்க் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியக் கடற்படை உறுதி கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.
சிறப்பம்சங்கள்: "புராஜெக்ட் 15 பிராவோ' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் கப்பல்கள் அனைத்தும், 163 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 7,300 டன் எடையைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. மணிக்கு சுமார் 56 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்வதற்காக, 4 எரிவாயு "டர்பைன்' இயந்திரங்களும் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன. 
இந்தப் போர்க் கப்பல்களில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட 2 ஹெலிகாப்டர்களையும் நிறுத்தி வைக்க முடியும். இந்தப் போர்க் கப்பல்கள், "ரேடார்' கருவியால் கண்டுபிடிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், எதிரிகளின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பமுடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட "விசாகப்பட்டினம்' போர்க் கப்பலானது, கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com