நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார்.
நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்


புது தில்லி: ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்துகளுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மேலும், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ராகுல் காந்தி வழக்கு விவகாரங்களை திரித்து பேசுவதாக மீனாட்சி லேகி என்பவரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த ராகுல், பிரதமர் மோடியை திருடன் என்று தான் கூறிய கருத்து, அரசியல் எதிரிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக,

தில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யான மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் அண்மையில் ராகுலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர், "ரஃபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லாத தகவல்களை ராகுல் காந்தி அளிக்கிறார்; இதன்மூலம் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கிறார். இதற்காக அவர்மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லேகி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடுகையில், "பொதுமக்கள் முன்னிலையில் வந்து, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பாதுகாவலர் நரேந்திர மோடி திருடர் எனத் தெரிவித்து விட்டது என ராகுல் கூறியுள்ளார். அதாவது ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து ராகுல் தவறான தகவல்களை அளிக்கிறார். இது வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்' என்றார். 

இதைக்கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:
 ஊடகம், பொதுமக்கள் முன்னிலையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து பேசியபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்ததாக கூறிய கருத்துகளில் உண்மையில்லை. இந்த வழக்கில் அட்டார்னி ஜெனரலால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்பதற்கு சட்டத்தில் இடமுள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்கையில், மேற்கண்ட கருத்துகள் எதையும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.

நீதிமன்ற தீர்ப்பில் அரசியல்வாதிகள் எதையாவது கண்டுபிடிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ கூடாது. தீர்ப்பு குறித்து ராகுல் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதலால் அவருக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்போம்.

இதுகுறித்து ராகுல் காந்தி அடுத்த வாரம் திங்கள்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தமது விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வெளியிட்டது குறித்து, அமேதியில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு கடந்த 10ஆம் தேதி அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் செய்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

ஆனால் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், மனுதாரர்களின் புதிய ஆவணங்கள் அடிப்படையில் சீராய்வு மனுவை விசாரிக்கப் போவதாக மட்டுமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com