உலக அளவில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

உலக அளவில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 54-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. 
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 54-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. 


உலக அளவில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, வெங்கய்ய நாயுடு பேசியது:
 அண்டை நாடான இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.  இதில்,  ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது. இலங்கையில் சுற்றுலாத் துறையை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா உள்பட எந்த நாடுகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பயங்கரவாதத்துக்கு  ஆதரவுத் தெரிவிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.   எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நாட்டின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி, அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். 
அண்மைக் காலமாக இளைஞர்களுக்கு வெளிநாட்டு உணவுகளின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களது ஆர்வத்தைக் குறைத்து கொண்டு உடல்நலத்துக்குத் தேவையான இந்திய உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக, கர்நாடகத்தில் சிறந்து விளங்கும் களி உடல்நலத்திற்கு உகந்தது.
இளைஞர்களுக்கு பொறுமை அவசியம்: உயர்கல்வியைப் பயிலுவது வாழ்க்கைக்காக மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்காகவும் என்பதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியே நமக்கு சிறந்த ஆதாரம் என்பதனை உணர வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் பொறுமை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் அனைத்துத் துறைகளிலும் போட்டி வலுத்துள்ளது. 
எனவே அதற்கு ஏற்ற வகையில் தங்களை மாணவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பட்டமளிப்பு நிகழ்ச்சியில் விவசாயிகளின் பிள்ளைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
பெண்கள் சிறந்து விளங்க வேண்டும்: பெண்களுக்கு கல்வி வழங்கினால் அவர்கள் அதில் அதிகம் சாதனை புரிவார்கள். உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பெண் ஒருவர் பதவி வகிப்பது அனைவருக்கும் பெருமை. செல்வத்துக்கு லட்சுமியும், கல்வி சரஸ்வதியும், வீரத்திற்கு பார்வதி என்று தெய்வங்களிலும் பெண்களூக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் ஆளுநர் வஜுபாய் வாலா, பெங்களூரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேணுகோபால்,  ஜெயதேவா மருத்துவமனை இயக்குநர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com