மக்களவை 3ஆவது கட்டத் தேர்தல்: 65.61% வாக்குகள் பதிவு

மக்களவைக்கு 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 65.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜனநாயகக் கடமையாற்றிய மன்மோகன் சிங், நவீன் பட்நாயக்,  கேரள ஆளுநர் பி. சதாசிவம்.
ஜனநாயகக் கடமையாற்றிய மன்மோகன் சிங், நவீன் பட்நாயக்,  கேரள ஆளுநர் பி. சதாசிவம்.

மக்களவைக்கு 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 65.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகப்பட்சமாக அஸ்ஸாமில் 80.73 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒடிஸாவில் 60.44 சதவீதம், மேற்குவங்கத்தில் 79.67 சதவீதம், பிகாரில் 59.97 சதவீதம், திரிபுராவில் 79.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை 2ஆவது கட்டத் தேர்தலின்போது, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை  காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகுதியுடன் சேர்த்து, குஜராத், கேரளம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் 116 தொகுதிகள் என்று மொத்தம் 117 தொகுதிகளுக்கு 3ஆவது கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
3ஆவது கட்டத் தேர்தல் தொடங்கியது முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வாக்களித்தனர். முடிவில் குஜராத்தில் 63.67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
குஜராத்தில் சில சம்பவங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது. அம்பேத்கர்நகரில் வாக்காளர்களை மிரட்டியதாக 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தகோத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து தேர்தல் அதிகாரியை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரளத்தில் 3 பேர் பலி: கேரளத்தில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 76.82 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கண்ணூரில் அதிகப்பட்சமாக 82.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 79.77 சதவீத வாக்குகள் பதிவாகின. திருவனந்தபுரத்தில் 73.26 சதவீதமும், பத்தனம்திட்டாவில் 73.82 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. பத்தனம்திட்டா, வடகரா தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்ற 2 பேர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். மேலும் ஒருவர் வாக்களித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் இறந்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய்யான செய்தியை வெளியிட்ட 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உ.பி.யில் ஒருவர் உயிரிழப்பு: சத்தீஸ்கரில் 64.68 சதவீதம், கோவாவில் 73.23 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 61.35 சதவீதம், கர்நாடகத்தில் 67.56 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 58.98 சதவீதம் வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அவை அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். அதேபோல், வாக்குச்சாவடியில் திரண்டிருந்த மக்களிடம் சமாஜவாதி கட்சிக்கு வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார். பதாயூன் அருகே உள்ள ஓன்லா தொகுதிக்குட்பட்ட சாவடியில் வாக்களிக்க காத்திருந்த முதியவர் ஒருவர், சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவையில் 42 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் சொந்த ஊரான அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெஜ்பெஹரா பேரவைத் தொகுதியில் 40 வாக்குச்சாவடிகளில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அனந்த்நாகில் 65 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை. அனந்த்நாக் தொகுதிக்கு நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 13.61 சதவீத வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com