ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் சதியா? ஏ.கே. பட்நாயக் தலைமையில் குழு அமைப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளிக்க சதிச் செயல் நடப்பதாக வழக்குரைஞர் அளித்த புகார் குறித்து  விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையில் சிறப்புக் குழுவை அம
ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் சதியா? ஏ.கே. பட்நாயக் தலைமையில் குழு அமைப்பு


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளிக்க சதிச் செயல் நடப்பதாக வழக்குரைஞர் அளித்த புகார் குறித்து  விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து வழக்குரைஞர்  உத்சவ் சிங் பைன்ஸ் வைத்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேலும், இந்த புகாரில் சதிச் செயல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழுவுக்கு சிபிஐ மற்றும் உளவுத் துறை, தில்லி காவல்துறையினர் ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதிக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டு, நெருப்புடன் விளையாடுவது போன்றது. பணம், அதிகாரம் படைத்தவர்கள் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. நீதித்துறை மீது கடநத 3, 4 ஆண்டுகளாக இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. நீதித்துறை மீதான தாக்குதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியிருந்தனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் விவகாரத்தில் பெரும் சதி உள்ளதாக வழக்குரைஞர் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து ஆணிவேர் வரை சென்று ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை கூடியது. அப்போது, இந்தப் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், "இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1.5 கோடி வரை தருவதற்கு சிலர் முயன்றனர்' என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அந்த அமர்வில், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 

சிறப்பு விசாரணைக் குழு: அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ""உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரும், வழக்குரைஞரின் பிரமாணப் பத்திரமும் அதிர்ச்சியளிக்கிறது. 

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதே சரியாக இருக்கும். அப்போதுதான் உண்மை வெளிவரும். இதுவே நீதித்துறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்'' என்று வாதிட்டார். 

அரசுத் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலும் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி வாதிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, வழக்குரைஞர் பைன்ஸ் அனுமதி கோரினார். 

அமைதியைக் குலைக்கக்கூடிய விஷயங்கள்: 

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை இந்தப் புகார் சோதித்துள்ளது. தற்போதைய நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை, தலைமை நீதிபதி ஏற்கெனவே அமைத்துள்ளார். வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அமைதியைக் குலைக்கக்கூடிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், சாட்சிகள் அழிக்கப்படாமல் இருக்க, வழக்குரைஞருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியதும் அவசியம். அவர் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை வியாழக்கிழமை (ஏப். 25) காலைக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அது கையில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்; தட்டச்சு செய்ததாக இருக்கக் கூடாது.

சிபிஐ இயக்குநருடன் ஆலோசனை: இந்த விவகாரத்தில், மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), நுண்ணறிவு பிரிவு (ஐபி), தில்லி காவல்துறை ஆகிய அமைப்புகளின் இயக்குநர்களிடம் தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஆணிவேர் வரை...: இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், ""வழக்குரைஞர் பைன்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டின் ஆணிவேர் வரை சென்று உச்சநீதிமன்றம் ஆராயும். நீதித்துறையைக் கட்டுப்படுத்த சிலர் நினைப்பதாக வழக்குரைஞர் கூறியுள்ளது உண்மையானால், நீதித்துறையே அழிந்துவிடும். இந்த விசாரணைக்கும், தலைமை நீதிபதி அமைத்துள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெறும் விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று கூறினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com