நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் இதுவே.. 56 இன்ச் மார்பு என்று தற்பெருமை பேசுபவரால் அல்ல: ப.சிதம்பரம்

303 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றுள்ள முதல் 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க முன்னிலை கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் இதுவே.. 56 இன்ச் மார்பு என்று தற்பெருமை பேசுபவரால் அல்ல: ப.சிதம்பரம்


303 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றுள்ள முதல் 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க முன்னிலை கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"காங்கிரஸ் குறிப்பிடத்தக்க முன்னிலையை பெற்றுள்ளது. அதேசமயம் பாஜக தோல்விகளைச் சந்தித்துள்ளது. கூட்டணி அடிப்படையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறிப்பிடத்தக்க முன்னிலையை பெற்றுள்ளது. 'குறிப்பிடத்தக்க முன்னிலை' என்ற சொல்லை கருத்தில் கொள்ள வேண்டும். 

பாஜகவை காட்டிலும் பெற்றுள்ள முன்னிலையை தக்கவைத்து அதை மேலும் நீட்டிக்க வேண்டும். இதை உறுதி செய்ய வேண்டியது தான் தற்போதைக்கு முடிக்கவேண்டிய பணி.  

நேர்மையற்ற தேசப்பற்று, பாதுகாப்பு என்பதெல்லாம் பொய்யான பிரசாரங்கள். பாகிஸ்தானுக்கு எதிராக 1947, 1965 மற்றும் 1971 ஆகிய மூன்று போர்களில் நாட்டை காப்பாற்றியது யார். இந்தியா பாதுகாப்பாக உள்ளது. காரணம், இந்தியாவிடம் தொழில்முறை முப்படைகள் உள்ளது. 56- இன்ச் மார்பு என்று தற்பெருமை பேசுபவரால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. 

பண மதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி எனும் இரண்டு பேரழிவுகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு பண மதிப்பிழப்பு எனும் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும். கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. கணக்கில் வராத பணம் அனைத்தும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கணக்கில் கொண்டுவரப்பட்டுவிட்டது. 

மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்கரே, மிகவும் கொண்டாடப்பட்ட மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரி. அவர் குறித்து சாத்வி பிரக்யா சிங் தாகுரின் கருத்து கண்டனத்துக்குரியது. 

காங்கிரஸால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நியாய் திட்டம், ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்படும். இந்தியாவிடம் போதுமான பணம் உள்ளது. அதை எப்படி சரியாக ஒதுக்க வேண்டும் என்பது தான் கேள்வி. 

ராஜ் தாக்கரே பாஜகவுக்கும், சிவ சேனாவுக்கு எதிரான தனது பார்வையை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று வாக்காளர்களிடம் தெரிவிக்கிறார். அதை ஏன் நான் வரவேற்க கூடாது? சிவ சேனாவின் கடந்த ஒரிரு ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ இதழை நாம் படிக்க வேண்டும். 

2014-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 10 ஆண்டுகள் ஆட்சி செயல்பாடுகளை முன்வைத்து பிரசாரம் செய்தது. மோடி தனது மிகப் பெரிய வாக்குறுதிகள் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அந்த வாக்குறுதிகளுக்கு மக்கள் வாக்களித்தனர். எனவே, தற்போது தங்களுடைய கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால் நாம், மக்களுடைய வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் மற்றும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்புகிறோம்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகும், பாஜக அல்லாத கட்சிகளுடனான சந்திப்புக்கு பிறகும் தான் பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பதை காங்கிரஸ் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. 

மகாராஜா ஹரி சிங் மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் இடைய கையெழுத்தாகியுள்ளதை சரியாக படிக்க வேண்டும். சட்டப்பிரிவு 370-க்கு அப்பாற்பட்டு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சிறப்பு சட்டங்கள் உள்ளது. சட்டப்பிரிவு 370-ஐ மட்டும் தனித்து பார்ப்பது ஏன்? இந்தியா எப்படி ஒற்றுமையானது என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. 

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் பரிசீலனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, பாலியல் குற்றங்கள், என்கவுன்ட்டர், காணாமல் போவது, சித்திரவதை செய்வது போன்ற புகார்களுக்கு எதிர்ப்பு இல்லை இருப்பதை உறுதி செய்வதற்காகதான். புகார்கள் எழுந்தால் அது விசாரிக்கப்படும். அதை விசாரிப்பதில் என்ன தவறு உள்ளது. பாதுகாப்புக்கு சமமாக மனித உரிமையும் முக்கியமானது தான். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிக்கான பணியை மீண்டும் தொடங்கும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும். வேலைகளை உருவாக்கும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் ரூ. 72,000-ஐ செலுத்தும். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியப் பொருளாதாரத்தை தடம்புரளச் செய்துள்ளது. வேலையின்மை இந்த மாதம் 8.4 சதவீதத்தை தொட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இதுவே அதிகம். 

கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் கடன் மற்றும் துயரத்தில் மூழ்கினர். அனைத்து தரப்பினரும் அச்சத்தில் வாழ்கின்றனர். அனைத்து அமைப்புகளும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது, வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது அல்லது கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com