மோட்டார் வாகனங்கள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

சாலைப் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
மோட்டார் வாகனங்கள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்


சாலைப் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
மாநிலங்களவையில் மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா- 2019 வாக்கெடுப்புடன் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 108 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன. அதன் மீது 3 திருத்தங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி  கொண்டு வந்தார்.
மக்களவையில் இந்த மசோதா கடந்த 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மசோதாவில் அச்சுரீதியில் சில பிழைகள் இருந்ததால், அது மீண்டும் மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளது.
மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிதின் கட்கரி பேசுகையில், வாகன பதிவு கட்டணம், உரிமக் கட்டணம் உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகளை மத்திய அரசு பறிக்கவில்லை. மாநில அரசின் வருவாயில் ஒரு பைசாவை கூட மத்திய அரசு எடுக்காது. இந்தியாவில் 22 லட்சம் முதல் 25 லட்சம்  வரையிலும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஓட்டுநர்கள் பயிற்சி மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் மானியமாக ரூ.1 கோடி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இந்த மையங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஏழைகள், பழங்குடியினரை மேம்படுத்தும் வகையில், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் இருக்கலாம் என்றார்.
மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதாவில், அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10,000 அபராதம், ஓட்டுநர் உரிம விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 
அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்வோருக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.2,000 அபராதம், தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதத்துக்கு முடக்கி வைக்கவும் மசோதா வகை செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com