காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமர்நாத் யாத்திரை சென்றுள்ள யாத்ரீகர்களை ஜம்மு-காஷ்மீரில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதால், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அப்படியிருக்கையில், அமர்நாத் யாத்திரையை பாதியில் முடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அமர்நாத் யாத்திரை பாதியில் முடித்து கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டு, ஒட்டுமொத்த நாடும் கவலையடைந்துள்ளது. எனவே ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது அவரது கடமையாகும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தவிர, வேறு பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் குறைந்தே உள்ளது.

அப்படியிருக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக பாதுகாப்புப் படைகள் ஏன் அனுப்பப்பட்டன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றார் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் கரண் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமர்நாத் யாத்திரை பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது, மாநிலத்துக்கு வந்துள்ள யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கண்டு நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பீதியும், சந்தேகமும் கலந்த சூழ்நிலை நிலவுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com