குஜராத்தில் பலத்த மழை: நதிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால், பெரும்பாலான நதிகளின் நீர்மட்டம் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால், பெரும்பாலான நதிகளின் நீர்மட்டம் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
 இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: குஜராத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தெற்கு குஜராத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழையில் இருந்து மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 கடந்த 2 நாள்களில் அதிகபட்சமாக சூரத் தாலுகாவில் 298 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதையடுத்து வாபி பகுதியில் 221 மி.மீ மழையும், தரம்பூர் மற்றும் வல்சாத் மாவட்டங்களில் 125 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கிம் மற்றும் ஒளரங்கா நதிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தை எட்டியுள்ளது.
 பல நகரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மீட்புப் பணிக்காக, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 வதோதரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.
 கோதாவரியில் நீர்மட்டம் அதிகரிப்பு: இதனிடையே, ஆந்திரத்தில் கோதாவரி நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் சனிக்கிழமை குவிக்கப்பட்டனர்.
 இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "தெலங்கானாவில் இருந்து நீர் வரத்து அதிகரித்திருப்பதால், ஆந்திரத்தின் பத்ராசலம் பகுதியில் கோதாவரி நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோதாவரி நதியைச் சுற்றியுள்ள 60 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
 மேற்கு கோதாவரி மாவட்டத்தின் போலாவரம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும், கிழக்கு கோதாவரியின் தேவிப்பட்டினம் பகுதிக்கும் இடையே சாலை வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், மக்களை மீட்பதற்காக, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com