370 சட்டப்பிரிவு விவகாரம்: மத்திய அரசை ஆதரித்த கூட்டணி அல்லாத கட்சிகள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத இதர மாநில கட்சிகள் மத்திய அரசின் இம்முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
370 சட்டப்பிரிவு விவகாரம்: மத்திய அரசை ஆதரித்த கூட்டணி அல்லாத கட்சிகள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், பிடிபி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத இதர மாநில கட்சிகள் மத்திய அரசின் இம்முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இது தேச நலன் சார்ந்தது என்பதால் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

பிஜூ ஜனதா தளக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரசன்ன ஆச்சார்யா பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி என்று இன்று உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்சியின் சார்பில் நான் இதை ஆதரிக்கிறேன். பிஜூ ஜனதா தளம் ஒரு மாநில கட்சியாக இருந்தாலும், எங்களுக்கு தேச நலன் தான் முதன்மையானது என்று தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசுகையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இதில் மட்டுமல்லாமல் வேறு மசோதாக்களுக்கும் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றார்.

ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கிறோம். இதன்மூலம் அங்கு அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும் என நம்புகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அக்கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறுகையில், தேச நலனில் அக்கறை கொண்ட மத்திய அரசின் இம்முடிவை ஆம்ஆத்மி வரவேற்கிறது. தில்லியை காஷ்மீருடன் ஒப்பிட வேண்டாம் என்றார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஆகியோரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com