குஜராத்: வெள்ள மீட்புப் பணியில் விமானப் படை

குஜராத்தில் மழை, வெள்ள மீட்புப் பணிகளில் விமானப் படை வீரர்கள் 5,000 பேர் ஈடுபட்டுள்ளனர். வடக்கு குஜராத்தில் நவ்சாரி மாவட்ட கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 45 பேரை விமானப் படை வீரர்க

குஜராத்தில் மழை, வெள்ள மீட்புப் பணிகளில் விமானப் படை வீரர்கள் 5,000 பேர் ஈடுபட்டுள்ளனர். வடக்கு குஜராத்தில் நவ்சாரி மாவட்ட கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 45 பேரை விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக சூரத் விமானப் படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
 தொடர்மழை காரணமாக அம்பிகா, பூர்ணா நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 முதல் சுற்றில் 31 கிராமங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. அடுத்ததாக மேலும் ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மேலும் 14 கிராம மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. தங் மாவட்டம் வகாய் தாலுகாவில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் 340 மி.மீட்டர் மழை பெய்தது. நவ்சாரி மாவட்டத்தில் பல கிராமங்கள் அந்த மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.
 சூரத், ஆனந்த், தங், நவ்சாரி, வல்சாத் மாவட்டங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்தது. குஜராத்தின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 வட கர்நாடகத்தில் கனமழை: வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
 மகாராஷ்டிரத்தின் கொய்னா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரும், கர்நாடகத்தில் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெள்ளம் பாதித்த பகுதிகளை திங்கள்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட இருக்கிறார்.
 அஸ்ஸாமில் 90 பேர் உயிரிழப்பு: அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த பருவமழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 90 பேர் உயிரிழந்துவிட்டனர்.
 எனினும், இப்போது அங்கு வெள்ள நிலைமை மேம்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களில் மொத்தம் 1.22 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் தொடர்ந்து அபாய அளவிலேயே பாய்ந்து வருகிறது. சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com