நில ஆக்கிரமிப்பு புகார்கள்: ஆஸம் கானுக்கு எதிராக 27 வழக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில்,
நில ஆக்கிரமிப்பு புகார்கள்: ஆஸம் கானுக்கு எதிராக 27 வழக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆஸம் கானுக்கு எதிராக 27 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
 ராம்பூரில் உள்ள முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும், துணை வேந்தராகவும் ஆஸம் கான் உள்ளார். சமாஜவாதியின் மூத்த தலைவரான அவர், முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.
 இந்நிலையில், ராம்பூரில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்காக விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஆஸம் கான் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அவர் மீது 27 வழக்குகளை ராம்பூர் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பால் ஷர்மா, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல், பல்கலைக்கழகத்துக்காக தங்களது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையிடம் ஏராளமான விவசாயிகள் புகார் அளித்தனர். இதனடிப்படையில், 27 வழக்குகளை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்.
 இந்திய தண்டனையியல் சட்டத்தின் 323, 342, 447, 389, 506 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 0.349 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்த வழக்குகளில், கைது நடவடிக்கையுடன் சேர்த்து, அதிகபட்சம் 10 ஆண்டுகள் கடுங் காவல் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அஜய் பால் ஷர்மா.
 ராம்பூரில் 121 ஹெக்டேர் பரப்பளவில் முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் 3,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
 முன்னதாக, ராம்பூரில் உள்ள 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓரியண்டல் கல்லூரி நிர்வாகி தங்களது கல்லூரியில் இருந்த பழைமையான 9,000 புத்தகங்கள் திருடப்பட்டு, ஆஸம் கானின் பல்கலைக்கழகத்தில் கொண்டு சென்று வைக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.
 இதன்பேரில், ஆஸம் கானின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com