மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை: முதல்வர் எடியூரப்பா

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தினார்.
மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை: முதல்வர் எடியூரப்பா

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தினார்.
பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை மண்டல ஆணையர்கள்,  மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரிகள், துறை செயலாளர்களின் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: 
கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளது.  மாநிலத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.  விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நேரத்தில் மக்களுக்கு துணையாக இருப்பது அரசின் கடமையாகும்.  மக்களின் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும்.  நேர்மை, கடமை உணர்வு,  உறுதிப்பாட்டுடன் மக்கள் பணியாற்ற அதிகாரிகள் உறுதியேற்க வேண்டும்.  எந்த கோப்பாக இருந்தாலும் அவற்றை 2 அல்லது 3 நாள்களில் தீர்த்துவைக்க வேண்டும். நேர்மையாக கடமை உணர்வுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு நான் துணை நிற்பேன்.  ஆனால், கடமையை மறந்து அலட்சிய மனப்போக்குடன் பணியாற்றினால்,  அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். 
மக்களின் வரிப் பணத்தில் அதிகாரிகள் வாழ்ந்து வருகிறோம்.  அப்படியிருக்கையில்,  மக்களின் பிரச்னைகளை தீர்க்க முற்படாவிட்டால் என்ன பயன்? நேர்மையான அதிகாரிகளின் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் குறுக்கிட  மாட்டார்கள். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை அதிகாரிகளாகிய உங்கள் மீது உள்ளது. 
அதிகாரிகள் நன்றாக வேலை செய்தால்,  அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் பணி நேரத்தை சரிவர கடைப்பிடிக்க வேண்டும்.  காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு அனைவரும் வந்துவிட வேண்டும். காலம் கடந்து அலுவலகத்துக்கு வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
மாவட்ட அளவில் அரசு நிர்வாகம் சுறுசுறுப்பாகச் செயல்பட  வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பத்தால் மாவட்ட அளவிலான நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.  இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதிகாரிகள் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டிருந்தால்,  வளர்ச்சிப்பணிகள் வேகமாக நடைபெறாது. எனவே, அதிகாரிகள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 
மாவட்டங்களுக்கு மாதம் ஒருமுறை சென்று ஆய்வு நடத்த தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.  அதேபோல, மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் 2 முறை நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும்.  105 வட்டங்களில் நிலத்தடி நீர் சரிந்துள்ளது.  எனவே, வறட்சியைச் சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு குடிநீர், கால்நடைகளுக்கு தீவனங்கள் எளிதாகக் கிடைக்க வசதி செய்ய வேண்டும். 
3,067 கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக ரூ.422 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஆதாரத்தை ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது.  
பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதியுதவி திட்டத்தை திறம்படச் செயல்படுத்த வேண்டும். இதேபோல, ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். 
இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர்,  முதல்வரின் ஆலோசகர் லட்சுமிநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com