வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும், ரயில், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும், ரயில், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மும்பை, புணே மற்றும் பால்கர் மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர்.
 இரண்டாவது நாளாக மும்பையில் சனிக்கிழமை இரவும் கன மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது.
 இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பை மாநகரம் மற்றும் அதையடுத்த தாணே, பால்கர் மாவட்டங்கள், நவி மும்பை ஆகியவற்றில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும், பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது பற்றி தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 மும்பை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிகர் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 100 மி.மீ. மழையும், புறநகர்ப் பகுதிகளான தாணே மற்றும் நவி மும்பையில் 250 மி.மீ. மழையும் பதிவானதாகத் தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அலுவலகம் செல்வோருக்கு கன மழையால் ஏற்படக் கூடிய சிரமங்கள் தவிர்க்கப்பட்டன. நகரின் பல வழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
 மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் இருந்து ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் இடையிலான ரயில் சேவையும், கசரா - கோபோலி இடையிலான ரயில் சேவையும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் உதாசி தெரிவித்தார். இதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய ரயில் வழித்தடங்களில் மும்பையை நோக்கிச் செல்லும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன என்று மத்திய ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.
 புணே - மும்பை இடையிலான ரயில் வழித்தடம் மூடப்பட்டது. வெள்ள நீர் காரணமாக, மும்பையில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் செல்லக் கூடிய துரந்தோ, கொனார்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நாசிக் மாவட்டத்தில் உள்ள லகத்புரியில் சிக்கிக் கொண்டன. கன மழை காரணமாக மும்பையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பை நோக்கி வந்த இரு விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
 4 பேர் பலி: மும்பையின் புறநகர்ப் பகுதியான சான்ட்டாகுரூஸில் வெள்ளத்தால் சூழப்பட்ட தங்கள் வீட்டில் மின்சாரம் தாக்கி 52 வயது பெண்ணும், அவரது 26 வயது மகனும் இறந்தனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள விக்ரம்கட் தாலுகாவில் மழை வெள்ள நீரில் 16 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தார். இதேபோல் புணே மாவட்டத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் இறந்தார். அவரது தங்கை காயமடைந்தார்.
 ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: மும்பை தவிர அதன் அண்டை மாவட்டங்களான தாணே, நாசிக் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நாசிக் மாவட்டத்தில் கோதாவரி நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மும்பையின் புறநகர்ப் பகுதியான கோரேகானில் வீடுகள் சேதமடைந்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து 50 பேரை மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
 பாதிக்கப்பட்ட 450 பேர் மீட்பு: தாணே மாவட்டத்தின் ஜூ-நந்த்குரி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 குழந்தைகள் உள்பட 58 பேரை இந்திய விமானப் படைவீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அதேபோல், பால்கர் மாவட்டத்தில் உள்ள புராண்டா கிராமத்தில் வெள்ளத்தில் தத்தளித்த 15 பேரை விமானப்படை வீரர்கள் மி-17 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். மும்பையில் மித்தி நதிக்கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
 மழை நீடிக்கும்: மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேலும் 24 மணிநேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் நோக்கில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் மேலும் 6 குழுக்கள் தேவை என்று மகாராஷ்டிர அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com