சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: தண்டனை ரத்து கோரும் சஜ்ஜன் குமார் மனு மீது உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு விசாரணை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம்
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: தண்டனை ரத்து கோரும் சஜ்ஜன் குமார் மனு மீது உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு விசாரணை


சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு மே மாதம் விசாரிக்க உள்ளது. 
கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. 
இதில் தில்லியில் நிகழ்ந்த கலவரத்தில் கன்டோன்மெண்ட் பகுதியின் ராஜ் நகரில் 5 சீக்கியர்கள் கொல்லப்பட்டது மற்றும் குருத்வாரா ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பாக அப்போது காங்கிரஸ் பிரமுகராக இருந்த சஜ்ஜன்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது. 
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஜ்ஜன் குமார் நிரபராதி என்று கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
அதில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து தில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  
இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சஜ்ஜன் குமார், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சஜ்ஜன் குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
அந்த மனு மீது நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை திங்கள்கிழமை நடத்தியது. அப்போது நீதிபதிகள் அமர்வு, இது சாதாரண வழக்கு விவகாரம் அல்ல. உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் முன்பாக உரிய விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இந்த மனு மீது அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com