காஷ்மீரில் சிஆர்பிஎஃப்-காவல்துறை மோதல் என்ற பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பதிவு பொய்யானது

ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் (சிஆர்பிஎஃப்), அந்த மாநில காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பொய்யானது


ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் (சிஆர்பிஎஃப்), அந்த மாநில காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பொய்யானது என்று சம்பந்தப்பட்ட இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளன. 
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தனது சுட்டுரைப் பதிவில், காஷ்மீரில் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதியை கடந்து செல்ல கர்ப்பணிப் பெண் ஒருவரிடம் தகுந்த அனுமதிக் கடிதம் இல்லை என்று கூறி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். 
இதையடுத்து காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது என்று கூறியிருந்தார். 
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சிஆர்பிஎஃப் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பதிவு முற்றிலும் பொய்யானது. அடிப்படையற்ற ஒன்று. இந்திய பாதுகாப்புப் படையினர் தங்களுக்குள்ளாக ஒருங்கிணைப்போடும், நல்லிணக்கத்தோடும் பணியாற்றி வருகின்றனர். 
எங்களது வீரர்கள் அணியும் சீருடைகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவர் மனதிலும்  தேச பக்தியும், மூவர்ணக் கொடியையும் அடிப்படையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளது. சிஆர்பிஎஃப்-இன் இந்தப் பதிவை மத்திய உள்துறை அமைச்சகமும் தனது சுட்டுரைப் பக்கத்தில் வழிமொழிந்துள்ளது. 
அதேபோல் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தனது சுட்டுரைப் பக்கத்தில், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பதிவு முற்றிலும் மறுப்புக்குரியது. அவரது பதிவு தொடர்பாக சுட்டுரை நிறுவனம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com