சுடச்சுட

  

  இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமையில்லாததால், நாங்கள் சாகத்தான் வேண்டும்: பெலு கான் மகன் விரக்தி

  By DIN  |   Published on : 14th August 2019 10:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pehlu_khan_PTI


  பெலு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இந்த தருணத்தில் நாங்கள் சாகத்தான் வேண்டும் என்றே தோன்றுகிறது என பெலு கான் மகன் இர்ஷத் தெரிவித்துள்ளார்.  

  கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாங்கிய மாடுகளை பெலு கான் தனது வாகனம் மூலம் சொந்த மாநிலமான ஹரியாணாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெய்ப்பூர் - தில்லி தேசிய நெடுஞ்சாலை இடையே அல்வார் பகுதியில் பசுவை கடத்திச் செல்வதாக குற்றம்சாட்டி பசுப் பாதுகாவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். 

  இதையடுத்து, பலத்த காயமடைந்த அவர் இரண்டு நாள் கழித்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
   
  இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று பெலு கான் அடித்துக் கொல்லப்பட்டது. மற்றொன்று, பசுவை சட்டத்துக்குப் புறம்பாக அம்மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்டது.

  இதில் பெலு கான் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்த அல்வார் நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை அளித்து குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்படுவதாக இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

  இந்த நிலையில், பெலு கான் மகன் இர்ஷாத் கானிடம் இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தொலைபேசி மூலம் பேசியது. அப்போது, இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமையில்லாததால், நாங்கள் சாகத்தான் வேண்டும் என்று அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 

  இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், 

  "நாங்கள் சாக வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. விடியோ ஆதாரத்தையும் அவர்கள் மறுத்துவிட்டனர். தற்போது நாங்கள் என்ன செய்வது? இது நியாயமல்ல. விடியோவில் எனது தந்தையை அந்த கும்பல் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. அது பொய் என்றால், எனது தந்தை எப்படி இறந்தார்? 

  நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இதில் அரசியல் தலையீடு உள்ளது. போலீஸார் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர். நிறைய சாட்சிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் 3 அல்லது 4 நாட்களுக்கு முன் நடந்தது அல்ல. 2 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். அப்படி இருக்கையில், குற்றவாளிகளின் முகத்தை அவர்கள் எவ்வாறு நினைவில் கொள்வார்கள்? 

  எங்களுக்கு வேறு வழியில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது. இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமையில்லாததால், நாங்கள் சாகத்தான் வேண்டும் என்றே இந்த தருணத்தில் தோன்றுகிறது" என்றார். 

  இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்யப்பட்ட விடியோவில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் இடம்பெற்றிருந்தும், அந்த விடியோ காட்சி தெளிவாக இல்லாததால் நீதிமன்றம் விடியோ ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டமில்லாமல், அந்த விடியோவை பதிவு செய்தவரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவில்லை. பெலு கான் உயிரிழப்பதற்கு முன்பாக, தனது வாக்குமூலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்பதையும் நீதிமன்றம் இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது. 

  பெலு கான் மரணத்தின் பின்னணியிலும் குழப்பங்கள் கிளப்பிவிடப்பட்டது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பெலு கான் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என்றனர். ஆனால், பிரதேப் பரிசோதனை முடிவில் தாக்குதலால் ஏற்பட்ட காயத்தினால்தான் பெலு கான் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டது.

  நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சுதந்திர இந்தியாவினுடைய குடிமகனின் இந்த கருத்து மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai