எல்லையில் குவிக்கப்படும் பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார்

ஜம்மு-காஷ்மீரையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் கூடுதலாக படைகளைக் குவித்து வருவது கவலைக்குரிய விஷயம் அல்ல என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்
எல்லையில் குவிக்கப்படும் பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார்


ஜம்மு-காஷ்மீரையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் கூடுதலாக படைகளைக் குவித்து வருவது கவலைக்குரிய விஷயம் அல்ல என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு பதிலடி கொடுப்பதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ராணுவம் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து மக்களிடையே ஏதாவது  கொந்தளிப்பு ஏற்பட்டால் அதை அடக்குவதற்காக ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ உயரதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்யக் கூடும் என்றும், இதனால் அங்கு  சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. 
எல்லைப் பகுதியை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகளைஅனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவத் தளபதி விபின் ராவத் கலந்து கொண்டார். 
அப்போது அவரிடம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதிகரித்துள்ளதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து ராவத் கூறியது:
அது இயல்பானதுதான். ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளைக் குவிப்பதோடு, தளவாடங்களையும் எல்லைப் பகுதிக்கு நகர்த்துவது வழக்கம். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
எல்லைப் பகுதியில் எந்த பாதுகாப்புச் சவாலையும் சமாளிக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன.
இனி வரும் நாள்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாக்குதல்கள் அதிகரிக்குமா என்றுகேட்கிறீர்கள். அதை முடிவு செய்ய வேண்டியது பாகிஸ்தான் மட்டுமே என்று ராவத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com