வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. 
கோலாப்பூரில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்து சுத்தப்படுத்தும் மக்கள். நாள்: புதன்கிழமை.
கோலாப்பூரில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்து சுத்தப்படுத்தும் மக்கள். நாள்: புதன்கிழமை.


மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாங்லி, கோலாப்பூர், புணே, சதாரா, சோலாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 
குறிப்பாக வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெள்ள பாதிப்புப் பகுதிகளில் இருந்து 6.45 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், நதிகளில் வெள்ளம் வடிந்து வருவதால் கோலாப்பூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருவதாகவும் நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
பல்வேறு சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஷிரோல் தாலுகாவுக்கு அதிகபட்ச உதவிகள் வழங்கப்பட்ட காரணத்தால் அங்கும் நிலைமை மேம்பட்டுள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, கோலாப்பூரில் உள்ள ராஜாராம் தடுப்பணையில் பஞ்ச்கங்கா நதியின் நீர்மட்டம் 42.11 அடியாக இருந்தது. இது அபாய அளவான 43 அடியை விடக் குறைவாகும்.
செவ்வாய்க்கிழமை வரை வெள்ளத்தால் உயிரிழந்த 150 விலங்குகளின் உடல்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. இப்பகுதி மக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.
சாங்லி மாவட்டத்திலும் வெள்ள நீர் வடிந்து வருவதோடு, கிருஷ்ணா நதியில் அபாய அளவை விடக் குறைவாகவே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சாங்லி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி இர்வின் பாலம் அருகே கிருஷ்ணா நதியின் நீர்மட்டம் 41.9 அடியாகவே இருந்தது. இது அபாய அளவான 45 அடியை விடக் குறைவுதான்என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாங்லி, கோலாப்பூர், புணே, சதாரா, சோலாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் செவ்வாய்க்கிழமை வரை 49 பேர் இறந்து விட்டதாக கோட்டாட்சியர் தீபக் மாய்சேகர் தெரிவித்தார்.
கிருஷ்ணா நதி மீது கட்டப்பட்டுள்ள அலமாதி அணையில் இருந்து அண்டை மாநிலமான கர்நாடகம் அதிக அளவில் நீரைத் திறந்தால்தான் வெள்ள பாதிப்பு குறையும் என்பதால் அந்த நடவடிக்கையையே மகாராஷ்டிரம் பெரிதும் நம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com