கோப்புப்படம்
கோப்புப்படம்

முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸுக்கு வெட்கமே இல்லை: அமித்ஷா

காங்கிரஸ் கட்சி வெட்கமே இல்லாமல் இன்னும் முத்தலாக் நடைமுறை தொடர வேண்டும் என்று கூறுகிறது என அமித் ஷா விமரிசித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சி வெட்கமே இல்லாமல் இன்னும் முத்தலாக் நடைமுறை தொடர வேண்டும் என்று கூறுகிறது என அமித் ஷா விமரிசித்துள்ளார். 

முத்தலாக் தடை மசோதா குறித்து தில்லியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 

"முத்தலாக் நடைமுறை ஒரு முறைகேடான செயல் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது. நாடாளுமன்றத்தில் சில கட்சிகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், முறைகேடான இந்த நடைமுறை முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்களது ஆழ்மனதுக்கு தெரியும். அதை செய்ய அவர்களுக்கு தைரியம் கிடையாது. 

முத்தலாக் தடை மசோதா, முஸ்லிம்களின் நலனுக்கானது மட்டுமே தவிர வேறு எதற்காகவும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் சமணர்கள் என யாரும் முத்தலாக் தடை மசோதாவால் பலன் அனுபவிக்கப்போவதும் இல்லை, பாதிக்கப்படப்போவதும் இல்லை.

வாக்கு வங்கி அரசியல் இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முத்தலாக் அதற்கு ஒரு உதாரணம். இந்த தீய நடைமுறை பல ஆண்டுகளாக அனுமதித்ததற்குக் காரணமே வாக்கு வங்கி அரசியல்தான். 

ஏப்ரல் 23, 1985-இல் ஷா போனோ வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து முத்தலாக்கை தடை செய்தது. மேலும், முத்தலாக் கூறுவதற்கான காரணம் மற்றும் இழப்பீடு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் பழமைவாத முஸ்லிம்கள் மற்றும் வாக்கு வங்கி அழுத்தம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் இயற்றியது. 

இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வெட்கமே கிடையாது. முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து, அது இன்னும் தொடர வேண்டும் என்றே அவர்கள் கூறுகின்றனர். எதற்காக அது தொடர வேண்டும் என்றால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஒரு நியாயமான கருத்தைக் கூட அவர்கள் முன்வைக்கவில்லை. வெறும் வாக்கு வங்கி அரசியலை தக்கவைப்பதற்காக மட்டுமே தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்கின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com