எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வெளியேற்றம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நோயாளிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையைச் சுற்றி கரும்புகை சூழ்ந்ததால்
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நோயாளிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையைச் சுற்றி கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், "தீ விபத்து தொடர்பாக தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு 34 தீயணைப்பு வாகங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது' என்றனர்.
அவசர சிகிச்சை பிரிவு அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரிவு மூடப்பட்டுள்ளது. 
எய்ம்ஸ் மருத்துவமனையே புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி தீயணைப்பு துறை இயக்குநர் விபின் கென்டால் கூறுகையில், "தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறோம். அந்தக் கட்டடத்தில் தீ பற்றியபோது அங்கு சுமார் 5 பேர் இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து நடந்த இடம் நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தாத இடம் என்பதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது' என்றார்.
இந்நிலையில், தீ விபத்து நடைபெற்ற கட்டடம், அதற்கு அருகில் உள்ள கட்டடங்களில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில்தான் தற்போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது.  எய்ம்ஸ் மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பும் வேறு ஒரு கட்டடத்தில் லேசான தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com