கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு: ஆந்திரத்தில் 87 கிராமங்கள் பாதிப்பு

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களைச் சேர்ந்த  87 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 11,500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சனிக்கிழமை வெள்ளக்காடாய் காட்சியளித்த விஜயவாடா. (உள்படம்) அங்கு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டுச் செல்லும் தீயணைப்புப் படை வீரர்கள்.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: 
கிருஷ்ணா நதியைச் சுற்றியுள்ள குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களைச் சேர்ந்த 87 கிராமங்கள் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்தன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்த 11,553 பேர் 56 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் அங்கேயே வழங்கப்பட்டது. 
சில கிராமங்களில் உள்ள மக்கள், வெள்ளம் சூழ்ந்திருந்தாலும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராமங்களில் வெள்ளப் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. 4,300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 5,311 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள், பயிர்கள் முழுவதும் சேதமடைந்தன.  1,400 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த தோட்டப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. 
விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8.21 லட்சம் கன அடியிலிருந்து, 7. 99 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடுப்பணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 7.57 லட்சம் கன அடியாக உள்ளது. 
குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் வெள்ள நிலையை பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நாகார்ஜுன சாகர் மற்றும் புலிசிந்தலா அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, கோதாவரி நதியின் நீர்மட்டம் குறைந்தாலும், போலாவரம்,தேவிப்பட்டினத்துக்கு உள்பட்ட கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்த நிலையிலேயே உள்ளன என்றும் கிழக்கு கோதாவரி மாவட்ட அதிகாரிகள் 
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com