உத்தரகண்டில் அதீத கனமழை: உத்தரகாசியில் மட்டும் 10 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. உத்தரகாசியில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்டில் அதீத கனமழை: உத்தரகாசியில் மட்டும் 10 பேர் பலி


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. உத்தரகாசியில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 7 பேரும், டேராடூன் மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒரு பெண்ணும் மாயமாகினர்.

கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்புப் போன்ற அதீத கன மழையில் சிக்கி உத்தரகாசியில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உத்தரகாசியின் மகுடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்களும், ஆராகோட் பகுதியில் இருந்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 6 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வெள்ளத்தில் மாயமான நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியுள்ளார்.

மேலும், மாநில அவசர கால நடவடிக்கைகள் மையத்தின் அதிகாரிகள் கூறியதாவது:
உத்தரகாசி மாவட்டத்தின் ஆராகோட், மகுரி, திகோசி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழையால் வீடுகள் இடிந்தன. இதில் 7 பேர் மாயமாகினர். உத்தரகாசியில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டேராடூன் மாவட்டத்தில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில், காரில் சென்ற பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு கூடுதலாக மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, சார்தாம் யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது. ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும், கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல், கைலாஷ்-மானசரோவர் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அந்த யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com