தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லை

 தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லை

 தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பங்களிப்பு எதுவும் இல்லை என்று மஜத தேசியத் தலைவரும்,  முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் தொலைபேசியயை ஒட்டுக் கேட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா  உத்தரவிட்டுள்ளார்.  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பங்களிப்பு எதுவுமில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளும், அரசும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்துகொள்வதைக் காட்டிலும், மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும். கர்நாடகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால்,  மக்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ள நிலையில்,  மக்கள் குறைகளைத் தீர்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
பிரதமர் மோடிக்கு பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.  காஷ்மீர் விவகாரம், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370, 35(ஏ), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் பிரதமர் நரேந்திர மோடியும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.  எனவே, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டதாகக் கருதிவிட முடியாது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியதாகக் கூறுவதை நம்ப முடியவில்லை.
கர்நாடகம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாமதப்படுத்தாமல், இன்னலில் தவிக்கும் மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தைக் காட்டிலும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் முக்கியத்துவம் பெற்றுவருவது சரியாக இல்லை. ஏதோ கர்நாடகத்தில் முதல்முறையாக நடந்ததுபோல, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் தேவையில்லை. 
அரசியல் பழிவாங்கலுக்கு சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தினால்,  அதற்கு முடிவே இருக்காது. எம்எல்ஏக்களை மும்பைக்கு அழைத்துச் சென்றது, பாஜக ஆட்சி அமைத்ததின் பின்னணி போன்ற விவகாரத்தையும் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியிருந்தார். 
முந்தைய ஆட்சிக் காலங்களில் நடந்த விவகாரங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று ஒருசில தலைவர்கள் கூறியிருந்தனர். மஜத எம்எல்ஏவின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசும்போது பதிவான ஒலித்துணுக்கு குறித்தும் விசாரிக்க சிலர் கேட்டுள்ளனர். எல்லா விவகாரங்களையும் சிபிஐ விசாரணைக்கு எடுத்துச்சென்றால், இதற்கு முடிவே இல்லாமல் போகும் என்றார் தேவெ கௌடா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com