உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: விசாரணை நிறைவு- அடுத்த மாதம் அறிக்கை தாக்கலாக வாய்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையிலான ஒருநபர் குழு நடத்திய
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: விசாரணை நிறைவு- அடுத்த மாதம் அறிக்கை தாக்கலாக வாய்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையிலான ஒருநபர் குழு நடத்திய விசாரணை நிறைவடைந்து விட்டது. அந்தக் குழு தமது அறிக்கையை அடுத்த மாதம் மத்தியில் தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி விசாரணை நடத்தியது.

அப்போது தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரமில்லை என்று தெரிவித்து, குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது.
முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சிக்க வைக்க மிகப்பெரிய சதித்திட்டம் நடப்பதாக வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் என்பவர் குற்றம்சாட்டினார். 
உச்சநீதிமன்ற அமர்வுகளை ஏற்படுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையில் ஒரு நபர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ஏற்படுத்தியது. 

அத்துடன், நீதிபதி பட்நாயக்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், தில்லி காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
நீதிபதி பட்நாயக் தலைமையிலான ஒரு நபர் குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தாது; அவரை சிக்க வைக்க சதி நடப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். 
அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பட்நாயக் தலைமையிலான ஒரு நபர் குழு, வழக்குரைஞர் பைன்ஸ், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தது. 
வழக்குரைஞர் பைன்ஸிடமும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. நீதிபதி பட்நாயக் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் பைன்ஸ் நேரில் ஆஜரானார்.
தற்போது விசாரணைக் குழு தனது அறிக்கையை தயாரித்து விட்டது. அக்குழு தனது அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய இருக்கிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com