உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்: 18 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லக்னௌவில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுடன் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்.
லக்னௌவில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுடன் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்.


உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக இருந்து வந்த 4 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், இணையமைச்சராக இருந்த ஒருவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் அந்தஸ்தும் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 23 பேருக்கும், லக்னௌவில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர்களில், 6 பேர் கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சர்களாகவும், 6 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், மீதமுள்ள 11 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கான இலாகா விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பளிக்கப்பட்டவர்களில் ராம் நரேஷ் அக்னிஹோத்ரி, கமல் ராணி வருண் ஆகியோர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். 
ஏற்கெனவே தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக இருந்த சுரேஷ் ராணாவுக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அவர், முசாஃபர்நகரில் கடந்த 2013-இல் நிகழ்ந்த கலவரம் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார். அவருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர சிங் சௌதரி, ராஜ்பார் சமூகத்தைச் சேர்ந்த அனில் ராஜ்பார் ஆகியோர், கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த ஜெய்குமார் சிங் ஏற்கெனவே இணையமைச்சராக இருந்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், பாஜக மூத்த தலைவர்களுடன் யோகி ஆதித்யநாத் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் 2022-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதை கருத்தில் கொண்டு, புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றத்துக்கு ஏதுவாக, 5 அமைச்சர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அகிலேஷ் விமர்சனம்: இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. 
தனது தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்பவே, அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com