ராணுவத்துக்கு பிரத்யேக ஊழல் தடுப்புப் பிரிவு: ராஜ்நாத் ஒப்புதல்

ராணுவத்துக்கு பிரத்யேகமாக ஊழல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்துவது, மனித உரிமை விவகாரங்களைக் கையாள தனி அமைப்பு, ராணுவத்தின்
ராணுவத்துக்கு பிரத்யேக ஊழல் தடுப்புப் பிரிவு: ராஜ்நாத் ஒப்புதல்

ராணுவத்துக்கு பிரத்யேகமாக ஊழல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்துவது, மனித உரிமை விவகாரங்களைக் கையாள தனி அமைப்பு, ராணுவத்தின் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் 206 பேரை வேறு பணிகளில் அமர்த்துவது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:
ராணுவத்தின் தலைமை அலுவலகங்களை மறு சீரமைப்பது தொடர்பான முடிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, ராணுவத் தலைமையகங்களில் பணியாற்றும் 206 ராணுவ அதிகாரிகள், ராணுவத்தின் பல்வேறு அணிகள், பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர். இவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள், 8 பிரிகேடியர்கள், 9 கர்னல்கள், 186 லெப்டினென்ட் கர்னல் மற்றும் மேஜர்கள் ஆவர்.

இதேபோல், ராணுவத் தளபதியின் தலைமையின்கீழ் புதிய ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தப் பிரிவில், கர்னல் பதவி நிலையிலான 3 அதிகாரிகள் இடம்பெறுவர். அதாவது, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி இடம்பெறுவார். இதேபோல், மேஜர் ஜெனரல் நிலையிலான அதிகாரி தலைமையில் மனித உரிமைகள் விவகாரங்களை கையாள்வதற்கு புதிய அமைப்பை ஏற்படுத்தவும் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் மேல்முறையீட்டு அமைப்பாக இது விளங்கும். இந்த அமைப்பின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், சிறப்பான விசாரணையை உறுதி செய்யவும், காவல் கண்காணிப்பாளர், மூத்த காவல் கண்காணிப்பாளர் அதில் பணியமர்த்தப்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை மூத்த தளபதிகள் கட்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி செய்தனர். இந்த  நடவடிக்கைகளில், ராணுவ அதிகாரி நிலையிலான பதவியை மாற்றியமைப்பது, செலவைத் கட்டுப்படுத்துவது, படை வீரர்கள் எண்ணிக்கை சரியாக பராமரிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com