ஆர்ப்பாட்டம் இல்லாமல் இரண்டு ஆர்ப்பாட்டங்கள்!

மிகவும் பெரிய அளவில் நடத்தப்படும் என்று எதிர்பார்த்த இரண்டு ஆர்ப்பாட்டங்கள் பெயருக்கு நடத்தப்பட்டு கலைந்திருக்கின்றன.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.

மிகவும் பெரிய அளவில் நடத்தப்படும் என்று எதிர்பார்த்த இரண்டு ஆர்ப்பாட்டங்கள் பெயருக்கு நடத்தப்பட்டு கலைந்திருக்கின்றன. திமுகவால் முன்மொழியப்பட்ட காஷ்மீர் குறித்த தில்லி ஆர்ப்பாட்டமும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டமும் முழுமனதுடனும் ஆர்வத்துடனும் நடத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.

காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை பெரிய எதிர்பார்ப்புடன் திமுகவால் முன்மொழியப்பட்ட 15 எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்களே தவிர, தொண்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் வந்திருந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்கக் கோரி அண்மையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் தில்லியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்யத் தயக்கம் காட்டிய நிலையில், திமுக முன்னின்று நடத்த முற்பட்டது.

தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அந்தக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ஆனால், பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் சொற்ப அளவிலேயே வந்திருந்தனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது வியப்பைஅளித்தது. 
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டி அமளியில் ஈடுபட்ட நிலையில், அந்தக் கட்சிகளின் சார்பில் நாட்டின் தலைநகரான தில்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பங்கேற்கவில்லை என்பதோடு தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்கவில்லை. 
மத்திய பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததன் காரணமாகத்தான் ஐ.என்.எக்ஸ். வழக்கில் தீவிரம் காட்டப்பட்டு சிபிஐயால் 
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு தரப்பினர்  கூறி வருகின்றனர். 

இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கூட்டணிக் கட்சிகளும், சொந்தக் கட்சியும்கூட அவருக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வருகின்றன என்பதுதான் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புதன்கிழமை இரவு 7 மணியளவில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை பகல் ஒரு மணியளவிலேயே  மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு  செய்தார். மேலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் எவரும் பங்கேற்கவில்லை என்பதோடு போராட்டத்துக்கு தார்மிக ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. 
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

அப்படி அறிவித்த கே.எஸ்.அழகிரி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில்  நடைபெறும் ராஜீவ் காந்தியின் 75-ஆவது பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் ப. சிதம்பரத்துக்கு ஆதரவான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துவதற்குக்கூட யாரும் இருக்கவில்லை.

சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முக்கியத் தலைவர்கள் யாருமே பங்கேற்கவில்லை.  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சுதர்சன  நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ் என்று பெரிய தலைவர்கள் எவருமே பங்கேற்கவில்லை. தொண்டர்களும் நூறு பேருக்கும் குறைவாகத்தான் காணப்பட்டனர். 

திமுக அறிவிக்கும் எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டங்களில் திமுக பங்கு பெறாமல் ஒதுங்கியிருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவும், ஏனைய கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்ளாதது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இரண்டு ஆர்ப்பாட்டங்கள் ஆர்ப்பாட்டமே இல்லாமல் திமுகவாலும், காங்கிரஸாலும் காதும் காதும் வைத்ததுபோல் நடத்தப்பட்டன!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, தில்லி ஜந்தர் மந்தரில் எதிர்க்கட்சிகளின்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குலாம்நபி ஆசாத், சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், டி. ராஜா, டி.ஆர். பாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, டி.கே. ரங்கராஜன், நவாஸ் கனி, திருச்சி சிவா, கணேச மூர்த்தி  உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com