3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி

மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டை வியாழக்கிழமை சென்றடைந்தார்.
பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளின் சுற்றுப்பயணத்துக்காக தில்லியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி.
பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளின் சுற்றுப்பயணத்துக்காக தில்லியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி.

மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டை வியாழக்கிழமை சென்றடைந்தார்.
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
இதன் முதல் பகுதியாக பிரான்ஸ் நாட்டுக்கு வியாழக்கிழமை அவர் சென்றடைந்தார். அங்கு, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானையும், பிரதமர் எட்வர்ட் பிலிப்பையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். 
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1950 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இறந்த இந்தியர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைக்க உள்ளார். அங்குள்ள இந்தியர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். 
இந்தப் பயணம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவும், பிரான்ஸும் மிகச் சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளன.  பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பு நிலவி வருகிறது. பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டு பணியாற்றி வருகின்றன. 
இந்தப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவையும், ஒத்துழைப்பையும் மேலும் மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் பயணம்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கிறார். அங்கு, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயேத்துடன் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தப் பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் பதக்கத்தைப் பெறுவதை கெளரவமாகக் கருதுகிறேன். 
இந்தப் பயணத்தின்போது, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், அபுதாபி பட்டத்து இளவரசருடன் இணைந்து தபால்தலை வெளியிட இருக்கும் நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 
அந்நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில், ரூ பே அட்டையின் செயல்பாட்டையும் தொடங்கிவைக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரைன் பயணம்: இதையடுத்து, பஹ்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை செல்கிறார். அந்நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது, இது முதல் முறையாகும்.  அந்நாட்டுப் பிரதமர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமாத் பின் இஸா அல் கலிஃபாவையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
பஹ்ரைன் பயணம் குறித்தான அறிக்கையில், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக பஹ்ரைன் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன். 
இந்தப் பயணத்தின்போது, பஹ்ரைனிலுள்ள இந்திய மக்களையும் சந்திக்க உள்ளேன். அங்குள்ள ஸ்ரீநாத் கோயிலின் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கிவைக்க உள்ளதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 
இந்தப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
ஜி-7 மாநாடு: இதைத் தொடர்ந்து, வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்வதற்காக  பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஜி-7 மாநாட்டில் உரையாற்றும் அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், 3 நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 26-ஆம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com