காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை தளர்த்தப்பட்டிருந்தன.


காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை தளர்த்தப்பட்டிருந்தன.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன. இருப்பினும் போராட்டங்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால், கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.
அதன்படி, காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. சாலைகளில் போலீஸார் ஏற்படுத்தியிருந்த தடுப்பு அரண்கள் நீக்கப்பட்டன. ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் வியாழக்கிழமை அதிகரித்திருந்தது. 
இதேபோல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிற மாவட்டங்களின் தலைநகரங்களிலும் இயல்பு நிலை காணப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் ஆட்டோ ரிக்ஷாக்களும், கார்களும் இயக்கப்பட்டதைக் காண முடிந்தது.
நடுநிலை அளவிலான பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை அதிகரித்திருந்தது. 
அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில், பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை எதிர்பார்த்தபடி இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சந்தைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன. செல்லிடப் பேசி சேவை, இணையதளச் சேவை ஆகியவை தொடர்ந்து 18ஆவது நாளாக வியாழக்கிழமையும் முடக்கப்பட்டிருந்தன. 
லால் சௌக், பிரஸ் என்கிளேவ் உள்ளிட்ட இடங்களில் தரைவழித் தொலைபேசி இணைப்புகள் முடக்கப்பட்டிருந்தன. எனினும், பிற இடங்களில் தரைவழித் தொலைபேசி இணைப்புகள் தங்குதடையின்றி இயங்கின.
காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், போராட்டம் எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால் காஷ்மீரின் முக்கிய இடங்கள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com