காஷ்மீரில் இருந்து படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டமில்லை: கிஷண் ரெட்டி

ஜம்மு-காஷ்மீரில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.


ஜம்மு-காஷ்மீரில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.
ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நிலவிய பதற்றமான சூழல் தற்போது தணிந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டு விட்டது. அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. ஒரு சில மாவட்டங்களைத் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் தொலைபேசி சேவை, இணையதளச் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி சீர்குலைந்தால், இந்திய அரசு தவறிழைத்து விட்டதாக உலக நாடுகளிடம் முறையிடுவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றால் அங்கு மேலும் பதற்றம் அதிகரிக்கும். எனவே, அவர்கள் பொறுமை காக்க வேண்டும். முதலில் பாகிஸ்தான் எழுப்பும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் பிறகு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் எத்தனைக் கூட்டங்களை வேண்டுமானாலும் நடத்தலாம். ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் எதுவுமில்லை. கடந்த காலங்களில், அங்கு மாதக்கணக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்துள்ளன. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசியல் தலைவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். அவற்றை ஒப்பிடுகையில், அதுபோன்ற நிலை இப்போது இல்லை.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி சீர்குலையுமானால், அதை சர்வதேச நாடுகளிடம் முறையிடுவதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. இந்தச் சூழலில் அங்கு கூடுதலாகக் குவிக்கப்பட்டுள்ள படைகளை உடனடியாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவுமில்லை. படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com