சட்லஜ் நதியின் மதகுகளை பாகிஸ்தான் திறந்ததால் பஞ்சாபில் 17 கிராமங்களில் வெள்ள பாதிப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிள்ள சட்லஜ் நதியின் மதகுகளை பாகிஸ்தான் திறந்ததால், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் 17 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.


இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிள்ள சட்லஜ் நதியின் மதகுகளை பாகிஸ்தான் திறந்ததால், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் 17 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக சண்டீகரில் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
பஞ்சாபில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததால், சட்லஜ் நதியின் நீர்மட்டம் அதிகரித்திருந்தது. ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் பல பகுதிகள் ஏற்கெனவே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சட்லஜ் நதியின் மதகுகளை பாகிஸ்தான் திறந்துவிட்டது. அதனால், அந்த மாவட்டத்தின் 17 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டன  என்று அதிகாரிகள் கூறினர்.
சில நாள்களுக்கு முன், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சட்லஜ் நதியில் இருந்து 2 லட்சம் கன அடி நீரை இந்தியா திறந்து விட்டதால், பாகிஸ்தானின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
4,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்: பஞ்சாபில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 4, 000 ஹெக்டேர் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து மாநில விவசாயத் துறை ஆய்வு நடத்தியது. 
இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், பஞ்சாபின் 13 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பக்ராநங்கல் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட அதிக அளவு நீரால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தன. சுமார் 24,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 4, 000 ஹெக்டேர் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தன. ரூப்நகரில் அதிகபட்சமாக 1,715 ஹெக்டேர் பயிர்கள் முழுவதும் சேதமடைந்தன. அதையடுத்து மோகா பகுதியில் 1, 688 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. லூதியானா, மொஹாலி, அமிருதசரஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் பயிர்கள் சேதமடைந்தன.
வெள்ள நீர் வடியத் தொடங்கிய பின்னர், சேதமடைந்த பயிர்களால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com