கடன் கொடுக்க மறுத்த வங்கி: சிறுநீரகத்தை விற்க தயாரான விவசாயி

உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு கடன் கொடுக்க வங்கிகள் மறுத்ததையடுத்து, அவர் தனது சிறுநீரகத்தை விற்க தயார் என கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு கடன் கொடுக்க வங்கிகள் மறுத்ததையடுத்து, அவர் தனது சிறுநீரகத்தை விற்க தயார் என கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தார் சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). விவசாயியான இவர் பிரதமரின் கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் (பிஎம்கேவிஒய்) கீழ் பால்பண்ணை தொழில் நடத்த கடன் கோரி பொதுத் துறை வங்கிகளில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவரது விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிகள், கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டன. இதனால் விரக்தியடைந்த ராம்குமார், தனது ஒரு சிறுநீரகத்தை விற்று பணம் திரட்ட தயாராக இருப்பதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். 
இதுகுறித்து ராம்குமார் கூறியதாவது:
பிஎம்கேவிஒய் சான்றிதழை காட்டிய போதும் ஒரு பொதுத் துறை வங்கி கூட கடன் கொடுக்க முன்வரவில்லை. உறவினர்களிடம் கடன் வாங்கிதான் பண்ணை தொடங்குவதற்கான மேற்கூரை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ஆனால்,  தற்போது உறவினர்கள், கொடுத்த பணத்தை அதற்கான வட்டியுடன் சேர்த்துக் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், நான் பெரிதும் நம்பியிருந்த வங்கியும் கைவிட்டு விட்டது.
இதனால், வேறு வழி இல்லாத சூழலில்தான் சிறுநீரகத்தை விற்று கடனை அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றார்.
இச்சம்பவம் குறித்து ஷஹாரன்பூர் ஆணையர் சஞ்சய் குமார் கூறுகையில், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்திய பிறகே வங்கிகள் ஏன் ராம் குமாருக்கு கடன் கொடுக்க மறுத்தன என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவரும். இப்பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com