பிரதமர் மோடிக்கு உரிய அங்கீகாரம்: ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல பணிகளை அங்கீகரிக்காமல் எதிர்க்கட்சிகள் அவரை எதிர்கொள்ள இயலாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ள கருத்துக்
பிரதமர் மோடிக்கு உரிய அங்கீகாரம்: ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு


பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல பணிகளை அங்கீகரிக்காமல் எதிர்க்கட்சிகள் அவரை எதிர்கொள்ள இயலாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ள கருத்துக்கு, அக்கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தில்லியில் வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், நரேந்திர மோடியின் ஆட்சி முற்றிலும் எதிர்மறையானது அல்ல; மோடியின் நல்ல பணிகளை அங்கீகரிக்காமல், தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் மட்டுமே அவரை எதிர்கொள்ள இயலாது என்று பேசியிருந்தார். 

இந்நிலையில், அவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி, சசி தரூர், சர்மிஷ்டா முகர்ஜி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அபிஷேக் மனு சிங்வி, மோடியை விமர்சிக்க மட்டுமே செய்வது தவறு என்று எப்போதும் கூறி வருகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு வகையில் எதிர்க்கட்சிகள் மோடிக்கு உதவியே செய்கின்றன. ஒரு செயல்; அது நல்லதா, கெட்டதா என்பதை பிரச்னையின் அடிப்படையை வைத்து தீர்மானிக்க வேண்டும். மாறாக, அதைச் செய்பவர் யார் என்பதை வைத்து தீர்மானிக்கக் கூடாது. மோடி கொண்டுவந்த திட்டங்களில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் நிச்சயமாகவே நல்லதொரு திட்டமாகும் என்றார். 

அதேபோல், சசி தரூர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், நரேந்திர மோடி நல்ல விஷயங்களைக் கூறினாலோ, செய்தாலோ அதைப் பாராட்ட வேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளாகவே கூறி வருகிறேன். அப்போது தான் அவர் தவறு செய்யும்போது நாம் முன் வைக்கும் விமர்சனங்களுக்கு நம்பகத்தன்மை இருக்கும் என்று கூறியிருந்தார். 

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி, அபிஷேக் சிங்வியின் கருத்தை வரவேற்று கூறுகையில், தாங்கள் கூறியது உண்மை. தேசத்தை கட்டமைக்கும் பணியை அடுத்தடுத்து அமையும் அரசுகள் மேற்கொள்கின்றன. மோடியும், அவரது சகாக்களும் இதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்  என்று கூறியுள்ளார். 

எதிர்ப்பு: ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கே. திவாரி, சுய பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவையில் அடைக்கலம் தேடிவிட்டார்கள். அவர்கள் கட்சி நிர்வாகத்தை கைப்பற்றிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com