பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதியுதவி: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகள் கடன் அளிப்பதை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் ரூ.70,000 கோடி
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதியுதவி: நிர்மலா சீதாராமன்


நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகள் கடன் அளிப்பதை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் ரூ.70,000 கோடி கூடுதல் மூலதன நிதி உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி விகிதங்கள் குறைப்பின் பயன்களை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடு, வாகனம், இதர சில்லறை கடன்களுக்கான வட்டி குறையும்.
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் மூலதன நிதி உடனடியாக வழங்கப்படும். இந்த நடவடிக்கை, நாட்டின் நிதி கட்டமைப்பில் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி பணப்புழக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்திய 15 நாள்களுக்குள் அவர்களது ஆவணங்கள் திருப்பியளிக்கப்படுவது உறுதி செய்யப்படும். இதன் மூலம் கடன் வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறைக்கப்படுவதுடன், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும்.
வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, தேசிய வீட்டுவசதி வங்கியின் மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி ஆதரவு நிதி வழங்கப்படும்.  இதன் மூலம் வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கான மொத்த ஆதரவு நிதி ரூ.30,000 கோடியாக அதிகரிக்கும். கடன் அளிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆதார் தொடர்பான விதிமுறைகளில் உரிய மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

30 நாள்களுக்குள் ஜிஎஸ்டி நிலுவை தொகை: சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) அந்த நிறுவனங்களுக்கு திருப்பியளிக்க வேண்டிய நிலுவைத் தொகை 30 நாள்களுக்குள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு திருப்பியளிக்கப்படும் ஜிஎஸ்டி தொகை, இனி வரும் காலங்களில் விண்ணிப்பித்த 60 நாள்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு, நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிமைப்படுத்துவது, பொருள்களை சந்தைப்படுத்துவது, தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பாக யு.கே.சின்ஹா குழு அளித்த பரிந்துரைகள் மீதான முடிவு 30 நாள்களுக்குள் எடுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறையை எளிமைப்படுத்தும் வகையில், இதுதொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு  பரிசீலித்து வருகிறது என்றார்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்பட்ட வருமான வரி (ஏஞ்சல் வரி) நீக்கப்படுகிறது. அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்கீழ் தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.

முதலீட்டு நிறுவனங்களுக்கான வரி உயர்வு வாபஸ்
வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் ஈட்டும் ஆதாயங்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி உயர்வு திரும்பப் பெறப்படுகிறது.  மனைவணிக துறையில் மிகப் பெரிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிடப்படும்.

ஆட்டோமொபைல் துறைக்கு...
ஆட்டோமொபைல் துறைக்கு உத்வேகம் அளிக்கவும், வாகனங்களுக்கான தேவையை அதிகரிப்பதற்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:


அனைத்து அரசு துறைகளிலும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும். வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான கொள்கையை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வாகனப் பதிவு கட்டண உயர்வு ஒத்திவைப்பு: வரும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாங்கப்படும் பிஎஸ்-4 தரத்திலான வாகனங்கள், அவை பதிவு செய்யப்படும் காலம் முழுமைக்கும் இயங்க அனுமதிக்கப்படும். வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்றார் அவர்.

வரி வசூலில் கெடுபிடியை தடுக்க..
வருமான வரி வசூலில் கெடுபிடியையும், முறைகேடுகளையும் தடுக்கும் வகையில், இனி வருமான வரி நோட்டீஸ்கள், உத்தரவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் வாயிலாக அளிக்கப்படும். அதிகாரிகளால் அளிக்கப்படும் தனிப்பட்ட நோட்டீஸ்கள், கடிதங்கள் செல்லாதவையாக கருதப்படும். இதேபோல், நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புடைமை தொடர்பான விதிமுறை மீறல்கள் குற்றச் செயல்களாக கருதப்பட மாட்டாது.

பெரும் செல்வந்தர்களுக்கான வரி உயர்வில் மாற்றம் இல்லை

2019-20-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கான கூடுதல் வரி 15-இல் இருந்து 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான  கூடுதல் வரி 15-இல் இருந்து 37 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த வரி உயர்வு தற்போதைய சூழலில் மறுஆய்வு செய்யப்படமாட்டாது; 2022-ஆம் ஆண்டில்தான் மறுஆய்வு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com