அருண் ஜேட்லி மறைவு

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.
அருண் ஜேட்லி மறைவு

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

பண்பட்ட, நாகரிகமிக்க அரசியல் தலைவராக விளங்கிய ஜேட்லியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுவாசப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவை எதுவும் பலனளிக்கவில்லை.

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டார், ஜேட்லி. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அலுவல்பூர்வ பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொண்ட ஜேட்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மீண்டும் அப்பணிகளைத் தொடங்கினார்.

மோசமடைந்த உடல்நிலை: தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக, 2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவருக்கு பதிலாக, இடைக்கால நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் அறிவித்தார். தேர்தலுக்குப் பின், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த அரசில், அமைச்சர் பதவியை ஏற்கவும் அவர் மறுத்துவிட்டார்.

தலைமுறை மாற்றத்துக்கு வித்திட்டவர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் வழிநடத்தி வந்த பாஜகவை, அடுத்த தலைமுறையினரின் கைகளில் கொண்டுசேர்த்ததில் அருண் ஜேட்லிக்கு முக்கியப் பங்குண்டு. ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோதுதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் போன்ற முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது.

எதிர்க்கட்சியினரும் மதிப்பவர்: ஜேட்லி கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி. யாக இருந்துள்ளார். கட்சி வேறுபாடுகளின்றி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் மதிக்கப்படும் பெரும் அரசியல் தலைவராக அருண் ஜேட்லி விளங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராகவும், சட்டத் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

உண்மையான சாணக்கியர்: அருண் ஜேட்லியே பிரதமர் மோடியின் உண்மையான சாணக்கியராக விளங்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அமிருதசரஸில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், "விலைமதிப்புமிக்க வைரம்' என்று பிரதமர் மோடியே அவருக்குப் புகழாரம் சூட்டினார். 1990களில் இருந்தே மோடிக்கு பக்கபலமாக அருண் ஜேட்லி இருந்துள்ளார். ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்த மோடி, பாஜக தேசிய பொதுச் செயலாளராக 1990களின் இறுதியில் நியமிக்கப்பட்டார். அப்போது, தில்லி அசோகா சாலையிலிருந்த ஜேட்லியின் குடியிருப்பிலேயே மோடி தங்கியிருந்தார்.

குஜராத்தில் அப்போதைய முதல்வர் கேஷுபாய் படேலை ஆட்சியில் இருந்து அகற்றி, மோடியை முதல்வராக்கியதில் ஜேட்லிக்கு முக்கியப் பங்குண்டு. சட்டத்தில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற அவர், கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பிறகு, பல்வேறு சட்ட ஆலோசனைகளை மோடிக்கு வழங்கினார். அந்தச் சமயத்தில் பாஜகவின் பெரும்பாலான தலைவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜேட்லி அவருக்கு உறுதியாக ஆதரவு தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு லாகூரில் மிகச் சிறந்த வழக்குரைஞராக இருந்த ஜேட்லியின் தந்தை, கடந்த 1947-இல் பிரிவினையின்போது அங்கிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார். தந்தையின் அடியொற்றி ஜேட்லியும் சட்டம் பயின்றார்.

அரசின் செயல்பாடுகளை எடுத்துரைப்பது, அரசின் சட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும் எதிர்கருத்துகளுக்கு நேர்த்தியாக பதிலளிப்பது ஆகியவற்றுக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

2019 மக்களவைத் தேர்தல் குழப்பவாதிகளுக்கும், ஸ்திரத்தன்மை பெற்றவர்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்று தெரிவித்தது என ஜேட்லியின் சொல்வன்மைக்கு பல்வேறு உதாரணங்கள் தெரிவிக்கலாம்.
 மறைந்த ஜேட்லிக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

மறைந்த அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்குகள், தில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்துள்ளார்.
 முன்னதாக, அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை காலை வைக்கப்படுகிறது.

தலைவர்கள் புகழஞ்சலி    

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
சிறந்த நாடாளுமன்றவாதி; சவாலான பொறுப்புகளை நிறைவேற்றியவர்

குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு
நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

பிரதமர் நரேந்திர மோடி
மதிப்புமிக்க நண்பர்களில் ஒருவரை இழந்துவிட்டேன்

உள்துறை அமைச்சர் அமித் ஷா
கட்சியிலும், அரசியலிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 
அருண் ஜேட்லி ஆற்றிய பணிகள், மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com