கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தின்போது, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தின்போது, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
 கிருஷ்ண ஜயந்தி பண்டிகையையொட்டி, பரேலியை அடுத்த மக்ரி மவாதா கிராமத்தில் கிருஷ்ணர் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த கிராமத்தில் ஊர்வலத்தின்போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
 இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
 மக்ரி மவாதா கிராமத்தில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி, ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவடையும் நேரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பிரிவைச் சேர்ந்த சிலர், மற்றொரு பிரிவினர் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், விரைவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சனிக்கிழமை பார்வையிட்டார். அசம்பாவிதங்கள் ஏதும் மீண்டும் நிகழாமல் தடுக்க அந்தப் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மோதலுக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com