காஷ்மீரில் பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும், புறக்கணிக்கும் மாணவர்கள்! என்ன காரணம்? 

காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும், புறக்கணிக்கும் மாணவர்கள்! என்ன காரணம்? 


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு பகுதியில் கடந்த ஆக.9ம் தேதி நடைமுறையில் இருந்த தடை உத்தரவை ரத்து செய்து ஜம்மு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

தொடர்ந்து, அப்பகுதியில் ஆக.10 முதல், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆக.10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. 

அதன்பின்னர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 20ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள 200 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட ஒரு சில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் பள்ளிகள் செயல்படாத நிலையில், இனியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினால் குழந்தைகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படும், எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என்று அம்மாவட்ட கல்வித்துறை செயலர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும், இதுவரை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வகுப்புகளில் ஆசிரியர்கள் மட்டுமே காணப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.

முக்கியமாக, ஸ்ரீநகரில் உள்ள  டிண்தாலே பிஸ்கோ(Tyndale Biscoe), மல்லின்சன், டி.பி.எஸ், நேஷனல் ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று கூறப்படுகிறது.  

காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகரில் அப்துல் ரஷீத் என்பவர் கூறும்போது, 'காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்த சமயத்தில் எங்களது குழந்தையை அனுப்பவேண்டிய கட்டாயமில்லை. நிலைமை சரியான பின்னரே நாங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

மொத்தம் 1,500 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 1,000 நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களின் வருகைப்பதிவு எதிர்பாராத அளவு குறைவாகவே காணப்படுகிறது. 

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அம்மாநில செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com